கடைசி இரண்டு ஓவரில் காட்டடி அடித்த ஜடேஜா! கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்பை மங்க வைத்த சென்னை...த்ரில் வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்
1469Shares

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின, சென்னை அணி ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது.

ஆனால், கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை இந்த போட்டியின் வெற்றி மிகவும் முக்கியம், அப்போது தான் எளிதாக பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள முடியும்.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. கொலத்தா அணி சார்பில் துவக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களம் இறங்கினர்.

இதில், கில் 17 பந்துகளில் 26 ஓட்டங்கள் குவித்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினாலும், மற்றொரு துவக்க வீரரான ராணா நங்கூரம் போன்று நிலைத்து நின்று ஆடி, சென்னை அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடினார்.

கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் வந்து 10 பந்துகளில் 21 ஓட்டங்கள் குவிக்க, இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 172 ஓட்டங்கள் குவித்தது.

அதன் பின் 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர் வாட்சன் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோனி ஒரு ஓட்டத்தில் நடையை கட்டினார்.

அடுத்து வந்த ராயுடு அதிரடி 20 பந்துகளில் 38 ஓட்டங்கள் குவித்து நடையை கட்டினார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரரான ருதுராஜ் கெயிக்வாட் கடந்த போட்டி போல இந்த முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அரைசதம் கடந்த அவர் 53 பந்துகளில் 72 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின் 18-வது ஓவரில் ஜடேஜா மற்றும் சாம்கரன் ஜோடி ஆட்டத்தையே மாற்றியது.

சென்னை அணியின் வெற்றிக்கு 2 ஓவரில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது ஜடேஜா பெர்குசன் வீசிய 19வது ஓவரில் 2 போர், 1 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட, அந்த ஓவரில் மட்டும் சென்னை அணி 20 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 10 ஓட்டங்கள் தேவை என்ற போது, கொல்கத்தா அணி சார்பில், கம்லேஷ் நாகர்கோட்டி வீசினார்.

சாம் கர்ரன் முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். 4வது பந்தை டாட் பால் ஆடிய ஜடேஜா அடுத்த பந்தில் சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ஜடேஜா அசத்தலாக சிக்ஸ் அடிக்க சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு மங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்