நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பாமல் இருக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில் அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
மேலும் முரளிதரனே விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலக கோரினார். இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகினார்.
அதன் பின், இணையவாசி ஒருவர், மிகவும் மோசமான வார்த்தைகளால், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த்திருந்தார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த நபரை கண்டுபிடித்து தண்டனை வழங்க பல்வேறு தரப்பினர் கோரினர்.
இதையடுத்து அந்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இண்டர் போல் உதவியுடன், அவரை கைது செய்ய நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டு வருவதாகவும் சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பினால் குற்றம்சாட்டப்பட்டவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.