பிரான்சில் மோசமாக தாக்கப்பட்ட இளம்பெண்: வழக்கு ஒத்திவைப்பு

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் இளம்பெண்ணொருவர் பட்டப்பகலில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர் மீதான விசாரணை அக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் Marie Laguerre எனும் இளம் பெண், சாலையோர உணவகம் ஒன்றின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, நபர் ஒருவர் அவர் மீது ஆஷ் ட்ரேயை தூக்கி வீசினார்.

இதனால் ஆத்திரமடைந்த Laguerre அந்த நபரை திட்டியுள்ளார். அப்போது மீண்டும் Laguerre-யின் அருகில் வந்த குறித்த நபர், அவரை மோசமாக தாக்கினார். இச்சம்பவம் சிசிடிவி கமெராவில் பதிவானது.

அதனைத் தொடர்ந்து, Laguerre அந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதன் பின்னர், பொதுவெளியில் பெண்களிடம் தவறாகவும், மோசமாக நடந்துகொள்பவர்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை கிடைக்க வேண்டும் எனும் குரல் வலுத்தது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை குறித்த நபரை பொலிசார் கைது செய்தனர். பின்னர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை அறிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, வியாழன் அன்று இது தொடர்பான வழக்கு விசாரணை பாரிஸ் நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் மீதான விசாரணையை அக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக நிதீமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து Laguerre கூறும்போது தான் ’Shut up' என்று கூறியதற்காகவே அந்த நபர் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

‘இது ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்சனையாகும். பொதுவெளியில் அத்துமீறி நடந்துகொள்ளும் நபர்களுக்கு இது நல்ல பாடம் புகட்டும் என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தனிநபர் மீதான இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு சம்பவ இடத்திலேயே 857 டொலர்கள் அபராதம் விதிக்கும் சட்டத்தை பிரான்சில் இயற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers