பர்கர் சாப்பிட்டதால் எட்டு வருடங்கள் படுக்கையிலிருந்த சிறுவன் மரணம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் பர்கர் சாப்பிட்டதால் நோய்வாய்ப்பட்டு எட்டு வருடங்கள் படுக்கையிலிருந்த ஒரு சிறுவன் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தான். மாமிசம் சேர்க்கப்பட்ட பர்கர் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட 15 சிறுவர்களில் Nolan Moittieயும் ஒருவன்.

அந்த பர்கரில் சேர்க்கப்பட்டிருந்த மாமிசத்தில் நோய்க்கிருமிகள் இருந்துள்ளதே பிரச்னைக்கு காரணம் என கண்டறியப்பட்டதையடுத்து, அந்த மாமிசத்தை விற்ற நிறுவன உரிமையாளரான Guy Lamorletteக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

Nolanக்கு பக்கவாதம் ஏற்பட்டதோடு, பல அறுவை சிகிச்சைகளுக்கு அவன் உட்படுத்தப்பட்டிருந்தான்.

அந்த பர்கரில் பயன்படுத்தப்பட்ட உறையவைக்கப்பட்டிருந்த மாமிசத்திலிருந்த ஈ.கோலை என்னும் நோய்க்கிருமி அவனை தாக்கும்போது அவனுக்கு இரண்டு வயது கூட ஆகாமலிருந்ததால், அவனது நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டது.

2011ஆம் ஆண்டு நடந்த அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பலருக்கு சிறுகுடல் பாதிப்பும் சிறுநீரகத்தொற்றும் ஏற்பட்டிருந்த நிலையில், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த Nolan கடந்த சனிக்கிழமை உயிரிழந்தான்.

Nolanஇன் மரணம், அவன் நீண்ட காலமாக அனுபவித்து வந்த சித்திரவதைக்கு ஒரு முடிவு என்று தெரிவித்துள்ள அவனது குடும்ப சட்டத்தரணியான Florence Rault, அவனது கால்கள் கோணலாகி, எலும்புகள் நொறுங்குமளவுபலவீனமாகிவிட்டிருந்ததாகவும், அவனால் உணவையோ நீரையோ விழுங்கவோ, பேசவோ முடியாததோடு, அசையக்கூட முடியாத நிலையில் கடும் வேதனை அனுபவித்துவந்ததாகவும் தெரிவித்தார்.

இத்தனை ஆண்டுகளும், குழாய்கள் மூலமாகவே Nolanக்கு உணவு அளிக்கப்பட்டுவந்தது.

இதற்கிடையில் அந்த கிருமிகள் நிறைந்த மாமிசத்தை விற்ற Lamorletteக்கு சிறைத்தண்டனையோடு 50,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டதை மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒன்று உறுதிசெய்ததையடுத்து, அவர் உயர் நீதிமன்றம் ஒன்றில் மீண்டும் மேல் முறையீடு செய்ய உள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்