இஸ்லாமிய நிகழ்ச்சியில் பன்றிக்கறி பரிமாறப்பட்ட சம்பவம்: பின்னர் நடந்த சமாளிப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லினில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு ஒன்றில் பன்றிக்கறி பரிமாறப்பட்ட சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாரத் துவக்கத்தில் பெர்லினில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் பன்றிக்கறியால் செய்யப்பட்ட சாஸேஜ் இடம்பெற்றிருந்தது.

பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்பதால், அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் வகையில் உணவு வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் எழுந்த பெரும் எதிர்ப்பையடுத்து, இந்த சம்பவம் மத ரீதியாக யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக பின்னர் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய உள்துறை அமைச்சரான Horst Seehofer, மார்ச் மாதம் ஒரு நிகழ்ச்சியில் இஸ்லாம் ஜேர்மனியினுடையது அல்ல என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாக இருந்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இஸ்லாமிய மதச் சட்டப்படி பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

அந்நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட சாஸேஜ், இரத்த சாஸேஜ் என்று அழைக்கப்படும் சாஸேஜ் ஆகும். அது பன்றியின் இரத்தம், பன்றி மாமிசம் மற்றும் bacon எனப்படும் பன்றி இறைச்சி ஆகியவை சேர்த்து செய்யப்படும் ஒரு சாஸேஜாகும்.

ட்விட்டரில் வெளியிட்ட ட்வீட் ஒன்றில் ஜேர்மன் பத்திரிகையாளரான Tuncay Özdamar, Seehoferஇன் உள்துறை அமைச்சகம் என்ன கூற விரும்புகிறது? பன்றி மாமிசம் சாப்பிடாத இஸ்லாமியர்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய Seehofer, தான் ஒரு ஜேர்மானிய இஸ்லாமைப் பார்க்க விரும்புவதாக பேசினார்.

அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ள Özdamar, Seehoferஇன் இரட்டை வேடத்தால், ஜேர்மனியிலுள்ள இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவு ஒருபோதும் அவருக்கு கிடைக்காது என்று கூறியுள்ளார்.

உள்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கான ஹலால் உணவு, சைவ உணவு, மாமிசம் மற்றும் மீன் உணவு என பலவகை உணவுகள் பரிமாறப்பட்டிருந்ததாகவும், ஒவ்வொன்றின் மேலும் விவரமாக அது என்ன உணவு என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்