60 நாட்கள் படுக்கையில் இருந்தால் 18,500 டொலர் சம்பளம்: நாசா அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

விண்வெளியில் செயற்கை புவியீர்ப்பு விசை, விண்வெளி வீரர்களுக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதை அறிந்துகொள்ள நாசா புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

அதாவது, 60 நாட்கள் எதுவும் செய்யாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டும். 24 முதல் 55 வயது உள்ள 12 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நாசா இதற்காக 18,500 அமெரிக்க டொலர்களை சம்பளமாக வழங்க உள்ளது

தூங்குவது மட்டுமல்லாமல் உணவு, ஓய்வு, குளியல், ஆராய்ச்சிகள் என அனைத்துமே படுக்கையில் இருந்தவாறே மேற்கொள்ள வேண்டும்.

பங்கேற்பாளர்களின் பாதிபேரின் தசை பலம், உடல் சமநிலை, இதயச் செயல்பாடு ஆகிய அனைத்தும் கண்காணிக்கப்படும். ஏனையவர்கள், எந்தவிதமான புவியீர்ப்பு விசையும் இல்லாத இடத்தில் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுவார்கள்.

இறுதியில் இந்த இரண்டு குழுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை வைத்து செயற்கை புவியீர்ப்பு விசை எந்த அளவுக்கு உபயோகமாக உள்ளது என்பதை உறுதி செய்வார்கள்.

“விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால் எடையிழப்பது போன்று தோன்றக்கூடிய உணர்வு எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

இதற்காகப் பூமியில் இருப்பது போன்று ஈர்ப்புவிசையை செயற்கையாக உருவாக்குவது நிச்சயம் உபயோகமாக இருக்கும் என நாசாவின் தலைமை மனித ஆராய்ச்சி திட்டத்தின் உதவித் தலைமை அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் லெடிசியா வெகா தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் நீண்ட காலம் இருக்கும் விண்வெளி வீரர்கள் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மன அழுத்தம், தனிமை உணர்வு மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு போன்றவற்றை குறைப்பதற்காக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்தால் செயற்கை புவியீர்ப்பு விசையை உருவாக்கக்கூடிய வசதியைச் செவ்வாய் போன்ற கிரகங்களுக்குச் செல்லும் விண்கலங்களில் நாசா வடிவமைக்கும், இது விண்வெளி வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

நாசா மேற்கொள்ளவுள்ள இந்த ஆராய்ச்சி ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்