சீனாவை கழற்றி விட்டு விட்டு இந்தியா போன்ற நாடுகளுடன் கைகோர்க்க ஜேர்மனி முடிவு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சீனாவுடனான உறவை முறித்துக்கொண்டு இந்தியா, ஜப்பான் அவுஸ்திரேலியா முதலான நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வைத்துக்கொள்ள ஜேர்மனி முடிவு செய்துள்ளது.

சீனாவின் மனித உரிமைகள் மீறல் மற்றும் ஆசிய நாடுகளை பொருளாதார ரீதியில் சார்ந்திருக்கும் தன்மை ஆகியவற்றை காரணம் காட்டி, தனது உறவுகளை சீனாவிலிருந்து இந்தோ பசிபிக் நாடுகள் பக்கம் திருப்ப ஜேர்மனி முடிவு செய்துள்ளது.

எதிர்காலத்தை விதிமுறைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் உருவமைக்க விரும்புகிறோமேயன்றி, பலத்தின் அடிப்படையில் அல்ல என்று கூறியுள்ள ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, அதனால்தான் எங்களைப் போன்ற குடியரசு மற்றும் சுதந்திர கொள்கைகளைக் கொண்ட நாடுகளுடன் கைகோர்க்க விரும்புகிறோம் என்கிறார்.

ஆசிய பகுதியில், ஜேர்மனி முக்கிய தூதரக கவனம் செலுத்தும் ஒரு நாடாக சீனா இருந்து வந்தது. ஆகவே, ஆண்டுதோறும் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் சீனாவை சந்தித்துவிடுவதுண்டு.

அத்துடன், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஜேர்மனியின் 50 சதவிகித வர்த்தகம் நடைபெறுவதில் சீனாவுக்கு பங்குண்டு.

என்றாலும், சீன சந்தையில் எதிர்பார்த்த அளவுக்கு ஜேர்மனியால் தடம் பதிக்க முடியவில்லை. சீனாவில் இயங்கும் ஜேர்மன் நிறுவனங்கள், தங்கள் தொழில்நுட்பத்தை சீனாவிடம் கையளிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு வேறு உறுத்தலாக இருந்தது.

இப்படி ஒரு பக்கம் சூழல் இருக்க, மற்றொரு பக்கம் ஹொங்ஹொங் தேசிய பாதுகாப்பு சட்டம், உகூர் இஸ்லாமியர்கள் மீதான சீன அடக்குமுறை ஆகிய விடயங்களும் சீனாவுடனான உறவு குறித்து ஜேர்மனியை ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது.

ஆக, மொத்தத்தில் சீனாவுடனான உறவுகளை முறித்துக்கொண்டு இந்தோ பசிபிக் நாடுகளுடன் உறவை வளர்த்துக்கொள்ள ஜேர்மனி எடுத்துள்ள இந்த முடிவு சீனாவுக்கு நிச்சயம் ஒரு பெரிய அடி என்பதில் சந்தேகமில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்