தமிழகத்தில் முன் விரோதம் காரணமாக விறகுக்கடை உரிமையாளரைக் கொலை செய்ய முயன்றதாகத் தொழிலதிபர் உட்பட 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் நத்தக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சாய ஆலைகளுக்கு விறகு விற்பனை செய்யும் கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் குப்பாண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான சாய ஆலைக்கு விறகு விற்பனை செய்து வந்துள்ளார்.
அப்போது விறகு விற்பனை காரணமாக 1 லட்சத்து 43 ஆயிரம் பணத்தை ரமேஷ் வழங்க வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பல முறை செந்தில்குமார், ரமேஷிடம் பணம் கேட்டும் அவர் பணம் தராமல் இழுத்தடித்தபடி இருந்துள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் கடும் வாக்கு வாதம் நடந்துள்ளது. இதை மனதில் வைத்து ஆத்திரமுடன் இருந்த ரமேஷ், செந்தில் குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன் படி தனது நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ் மற்றும் அவரின் நண்பர் விக்னேஷுடன் மேலும் மூன்று நபர்களைத் தயார்செய்து, செந்தில்குமாரை கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதை மட்டும் செய்து முடித்துவிட்டால் 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும் அவர்களுக்கு கூலியாகக் கொடுப்பதாகக்கூறி, 24 ஆயிரத்தை முன்பணமாகக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து கடந்த 14-ஆம் திகதி செந்தில் குமாரின் விறகு கடைக்குச் சென்ற இந்த கும்பல் அவரை வெட்ட முயன்றுள்ளது. இதில் செந்தில்குமார் சுதாரித்துக்கொண்டதால் வெட்டுக்காயத்துடன் தப்பித்துள்ளார்.
தப்பித்த அவர் உடனடியாக பொலிசாரிடம் சென்று புகார் அளித்துள்ளார். பின்னர், தீவிர விசாரணைக்குப் பிறகு வழக்கில் தொடர்புடைய ரமேஷ், கணேஷ், விக்னேஷ் ஆகிய 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.