சிறுமி ஆஷிபா வன்கொடுமை குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Athavan in இந்தியா
219Shares
219Shares
ibctamil.com

காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமி ஆஷிபாவின் குடும்பத்துக்கும், வழக்கை நடத்தும் வழக்கறிஞர்கள் இருவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி ஆஷிபா கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு மூன்று பொலிசார் மற்றும் ஒரு சிறுவன் உள்பட எட்டு பேரை காஷ்மீர் மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 8 பேரும் இன்று கத்துவா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கு 400 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.

இதற்கிடையே காஷ்மீர் மாநிலத்தில் இந்த வழக்கு நடந்தால், நேர்மையாக நடக்காது, ஆதலால், ஹரியாணா மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பாக இந்த வழக்கில் ஆஜராகி வாதாடும் வழக்கறிஞர்கள் இருவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது, எனவே அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஷ்மீர் மாநில பொலிசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

பொலிசாரின் நடவடிக்கையில் நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம், சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தனர், வழக்கு வரும் 27-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்