தேர்வில் தோல்வியடைந்த மாணவன்: விருந்து வைத்து கொண்டாடிய தந்தை

Report Print Kabilan in இந்தியா
642Shares
642Shares
lankasrimarket.com

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில், 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகனுக்கு விருந்து வைத்த தந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் சாகம் மாவட்டம் டிலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ், கட்டிட ஒப்பந்ததாரரான இவரது மகன் அன்சு 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஆனால், அன்சு தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் மனவேதனையடைந்த அவர், தந்தையை சந்திக்க கலக்கத்துடன் சென்றுள்ளார்.

ஆனால், அன்சுவின் தந்தையின் மகன் மீது எந்தவித வெறுப்பையும் காட்டாமல், அவரை கட்டித்தழுவி இனிப்பு ஊட்டினார்.

அத்துடன், தனது மகனின் தோல்வியை கொண்டாட முடிவு செய்த அவர், அன்சுவுடன் படித்த மாணவர்கள், பக்கத்து வீட்டினர், உறவினர்கள் என பலரையும் தனது வீட்டுக்கு அழைத்தார்.

பின்னர், அங்கு இசை நிகழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி விருந்து வைத்தார் சுரேந்திரகுமார். அவரின் இந்த செயலைக் கண்ட அன்சு உட்பட அனைவரும் வியந்தனர்.

இதுதொடர்பாக சுரேந்திரகுமார் கூறுகையில், ‘தேர்வுக்காக எனது மகன் கடுமையாக உழைத்தான். சிறப்பாக எழுதினான். ஆனாலும், தோல்வியடைந்து இருக்கிறான். அவனது தோல்வியை நான் பெரிய விடயமாக எடுத்து கொள்ளவில்லை.

அதே நேரத்தில் அவனை இன்னும் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். தேர்வில் தோல்வியடையும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நான் ஒரு விடயத்தை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

பள்ளியில் நடைபெறும் அரசு தேர்வு என்பது மாணவரின் கடைசி தேர்வு அல்ல. வாழ்க்கையில் தொடர்ந்து எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மாணவர் அன்சு கூறுகையில், ‘எனது தந்தையின் விருந்து கொண்டாட்டம் என்னை அடுத்த ஆண்டு தேர்வுக்கு மிகவும் ஊக்கப்படுத்தி இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்