பொலிசாரை பொதுவெளியில் கத்தியால் குத்திய கும்பல்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகளை தட்டிக் கேட்ட பொலிசார் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு வழக்கு சம்பந்தமாக காவல் ஆய்வாளார் செல்லத்துரை, உதவி ஆய்வாளர் ரூபன் மற்றும் முதல்நிலை காவலர் மோகன ஆகிய மூவரும் வந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் இவர்கள், பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு சுரங்கப் பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ரவுடி கும்பல் ஒன்று அங்கு ரகளையில் ஈடுபட்டிருந்தது.

அதனை காவல் ஆய்வாளர் செல்லத்துரை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது பொலிசாருக்கும், அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிசாரை குத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதனால், பொலிசாருக்கு கழுத்து மற்றும் கைகளில் கத்திகுத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அருகிலிருந்த போக்குவரத்து பொலிசார் காயமடைந்த பொலிசாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், பொலிசாரை தாக்கியவர்கள் அகதிகள் முகாமை சேர்ந்த விஜய், பிரேம்குமார், ஸ்ரீநாத் மற்றும் சூர்யா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களில் பிரேம்குமார் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பேருந்து நிலையத்தில் பொலிசார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers