கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய்? ரஜினியை முதல் முறையாக விமர்சித்த திமுக

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக இதுவரை மெளனமாகவே இருந்து வந்த நிலையில், ரஜினிக்கு எதிராக தன் கருத்தை திமுக முரசொலி பத்திரிகையில் முதல் முறையாக தெரிவித்துள்ளது.

அதில் ரஜினியும் அப்பாவி ரசிகனும் சொல்லிக்கொள்வது போல் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.

வெறும் ரசிகர்மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினியின் இந்தக் கருத்துக்கு அப்பாவி ரசிகன் என்ன சொல்லுகிறான்?

என்ன தலைவா? கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய்? உனக்கு கொடி பிடித்து கோஷம் போட்டு அப்பா அம்மா பெயரைக் கூட எடுத்துவிட்டு உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்து, ஊர் ஊராக, தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து, உன் படம் ரிலீசாகும் நாளே எங்களுக்குத் திருநாள் என்று வாணவேடிக்கை எல்லாம் நடத்திக் கொண்டாடிய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா? என்று ரசிகன் கேட்பது போல் எழுதப்பட்டுள்ளது.

அடுத்து, தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வரவேண்டாம், மன்றத்துக்காக யாரையும் செலவு செய்யவேண்டும் என்று நான் சொன்னது கிடையாது என்று ரஜினி சொல்லியிருந்தார்.

அதற்கு அப்பாவி ரசிகன், ‘காலைத்தான் வாரி விட்டாய் என்று நினைத்தால், இப்போது குழியும் பறிக்கிறாயே தலைவா. செலவு செய் என நீ சொன்னது கிடையாது. ஆனால் இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள் செலவு செய்து உன் புகழ்பாடி போஸ்டர் அடித்து ஒட்டியதை எல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டுதானே தலைவா இருந்தாய்.

உன் ஆனந்தமே எங்கள் ஆனந்தம் என்று எங்கள் வயிறைக் கட்டி வாயைக்கட்டி உனக்காக எவ்வளவு செலவு செய்தோம் என்பதை நீ அறியமாட்டாயா? அப்போதெல்லாம் வாய் மூடிக்கொண்டிருந்துவிட்டு இப்போது புத்திமதி சொல்லப் புறப்பட்டிருக்கிறாயே. இதுதான் நேர்மையா? என்று கேட்கிறான் என்பது போல் எழுதப்பட்டிருக்கிறது.

‘30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிடமுடியாது என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி.

இதற்கு, ‘நீ திரையில் தோன்றியபோது கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து விசில் எழுப்பி, ஆரவாரக் கூச்சல் போட்டு வாழ்க கோஷம் முழக்கிய எங்களைத் தகுதியற்ற கூட்டமாக்கிவிட்டாயே தலைவா. உன் மனசாட்சி இதை எப்படி ஏற்கிறது? 30,40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும்போது, இத்தனை ஆண்டு காலம் உன்னை, உயர்த்திப் பிடித்த எங்களுக்கு அரசியலில் ஈடுபடத் தகுதி இல்லை என்பது எத்தகைய நியாயம் தலைவா? என்று எழுதப்பட்டுள்ளது.

‘முதலில் நீங்கள் உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம்’ என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

இதற்கு அப்பாவி ரசிகன், ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லையா எனக் கூறியதுதான் எங்களுக்கு இதனை நினைவூட்டுகிறது. உங்கள் குடும்பத்தை மனைவி மக்களைப் பார்த்துக்கொண்டு நீங்கள் இருக்கவேண்டியதுதானே. பின் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என மற்றவர்கள் எங்களைப் பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்வது தலைவா? வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’னு சொல்லி வர்றதுக்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சிட்டியே தலைவா. இது சரிதானா? என்று கேட்கிறான் என்பதாக சிலந்தி பகுதியில் எழுதப்பட்டுள்ளது.

’கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி வாங்கணும், பணம் சம்பாதிக்கணும்’ என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்கமாட்டேன், அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகிவிடுங்கள் என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன் என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி.

‘அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல; என்றால் வரும் சட்டசபை தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் தலைவா? பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து கொள்கையிலே உறுதியாக நின்று போராடவேண்டியதுதானே.

உங்களுக்கு மட்டும் முதல் அமைச்சர் பதவி வேண்டும், நாங்கள் எல்லாம் அதற்கு நாயாய் பேயாய் உழைக்கவேண்டும், ஆனால் நாங்கள் மட்டும் பதவி ஆசைபடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா? என்று கேட்கப்பட்டுள்ளது.

இப்படியே இன்னும் போய்க்கொண்டிருக்கும் அந்தக் கட்டுரையின் முடிவில், உன்னை நினைத்து செயல்பட்ட எங்களை தூக்கி எறிந்துவிட்டாய். உன்னை நம்பி நாங்கள் ஆடிக்கொண்டிருந்தோம். ஆனால் நீயோ யாருடையோ கயிற்று அசைவிலோ ஆடும் பொம்மையாகிவிட்டாய்

ஹூ ஈஸ் பிளாக் ஷூப் மே... மே... மே... என்று அந்த கட்டுரையில் முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers