தமிழகத்தில் காதலனுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப் குரூப்பில் பரவியதால், இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா(18). கல்லூரியில் படித்து வரும் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் கண்ணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜீவா, கண்ணனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
காதலி பேசாததால் கண்ணன் ஆத்திரத்தில் இருந்த நிலையில், கண்ணனும், ஜீவாவும் அமர்ந்திருக்கும் புகைப்படம் கிராமப் பகுதியில் இருக்கும் நண்பர்கள் வாட்ஸ் குரூப்பில் பரவியுள்ளது.
இதை அறிந்த ஜீவாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
பெற்றோர் தொடர்ந்து அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததால், மிகுந்த வேதனையில் இருந்த ஜீவா அவமானம் தாங்கமுடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த புகைப்படத்தை வேண்டும் என்றே கண்ணன் தான் வாட்ஸ் அப் குரூப்பில் பரப்பியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மகள் சாவிற்கு கண்ணன்தான் தான் காரணம் என்று கூறி பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.