தீ விபத்தில் கொல்லப்பட்ட தாய், மகள்: சொத்துக்காக பெற்றோரே திட்டமிட்ட சதி அம்பலம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் குடிசை தீப்பிடித்து எரிந்து, தாய் மகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 4 பெண்கள் உட்பட அவர்களின் 7 உறவினர்களை தாளவாடி பொலிசார் கைது செய்துள்ளதில், இந்த சதியின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதாகும் ராஜம்மாள். கணவர் நாகண்ணா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் ராஜம்மாள் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு மாதேவ பிரசாத்(20) என்ற மகனும் கீதா(18) என்ற மகளும் உள்ளனர். ராஜம்மாள் தனது மகள் மற்றும் மகனுடன், அதே ஊரில் உள்ள தனது தாய் தந்தை வசித்து வந்த வீட்டில் இருந்தபடி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜம்மாள், அதே ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள தனது இடத்தில் தனியாக குடிசை அமைத்து குடியேறியுள்ளார்.

மகன் மாதேவ பிரசாத் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கேரளாவிற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் ராஜம்மாளின் குடிசை வீடு முற்றிலும் தீப்பிடித்து எரிந்த நிலையில் ராஜம்மாள், கீதா இருவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தாளவாடி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது இருவரின் உடல்களும் தீயில் கருகிய நிலையில் இருந்தது.

இதனால் சம்பவ இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரித்துள்ளனர்.

அப்போது சொத்து பிரச்னை காரணமாக குடிசை வீட்டில் தீ வைத்து இருவரும் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக ராஜம்மாளின் தந்தை, ராஜம்மாளின் தாயார் சிவமல்லம்மா, ராஜம்மாளின் மாமியார் தொட்டமாதம்மா, ராஜம்மாளின் தம்பி பிரேஸ்,

உறவினர்கள் மாதேவம்மா, நாகரத்தினா, லிங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த ராஜம்மாள், கீதாவுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தீவைத்து கொல்லப்பட்டதாக வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers