தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது நடந்த வன்முறையின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், 3வது முறையாக விசாரணை காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு, தேவைப்பட்டால் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருப்பதாக அக்குழுவினர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.