தமிழகத்தையே உலுக்கிய சுபஸ்ரீயின் மரணம்... சீமான் என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, பேனர் விழுந்து இறந்த சம்பவத்தில் சீமான் மிகுந்த வேதனையுடன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்த போது பின்னே வந்த லொறி மோதி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரைப்பிரபலங்கள் சிலர் தங்கள் ரசிகர்களுக்கு பிளக்ஸ் எதுவும் வைக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர்.

அதுமட்டுமின்றி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில், டிரைவர் மட்டும் கைது செய்யப்பட்டு, அந்த பேனர் வைக்க காரணமான அதிமுக-வை சேர்ந்த நபரை இன்னும் கைது செய்யாமல் உள்ளதால், இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இந்த பிளக்ஸ் வைக்கும் முறையை கொண்டு வந்ததே, அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகள் தான், இவர்கள் அதிகமாக வைக்கின்றனர்.

குறிப்பாக இறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வீட்டிலிருந்து கட்சி அலுவலகத்திற்கோ, சட்ட சபைக்கோ சென்றால், வீடு நெடுகிலும் பேனர்கள் இருக்கும்.

ஒரு கூட்டமோ, மாநாடோ நடக்கிறது என்றால், அந்த இடத்தை ஒட்டி நாம் பேனர் வைக்கலாம். அதுவே தெரு முழுவதிலும் வைத்தோம் என்றால், அது பிரச்னையில் தான் போய் முடியும்.

அது போன்று தான் தங்கை சுபஸ்ரீயின் மரணம் நடந்துள்ளது. அந்த பேனர் அவர் மீது விழுந்ததால், பின்னே வந்த வாகன ஓட்டிக்கு கீழே இருப்பது தெரியாது. இதில் அவர் மேல் அதிகம் தவறு சொல்ல முடியாது.

இதை எல்லாம் விட கொடுமை என்னவென்றால், அதிமுகவை சேர்ந்தவரும், அமைச்சருமான ஜெய்குமார் ஆயிரம் பேனர் வைத்தால், ஒன்று விழத்தான் செய்யும் என்று சொன்னது பொறுப்பற்ற பதில், அதை விட குத்தி கொலை செய்தவனை கைது செய் என்று கூறினால், கத்தியை தட்டியவனை கைது செய் என்ற கூத்து போல், பதாகை தயாரிக்கும் இடங்களுக்கு சென்று பூட்டு போடுவது வேடிக்கையானது.

இதற்கு காரணமான உரிய நபரை கைது செய்ய வேண்டும், அதுமட்டுமின்றி அந்த இடத்தில் எப்படி இத்தனை பேனர்கள் வைக்கப்பட்டது என்று விசாரிக்க வேண்டும். ஆனால் இப்போது தமிழகத்தில் யார் ஆட்சி நடக்கிறது? அப்புறம் எப்படி அவர் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்