கனடாவுக்கு செல்லவிருந்த இலங்கையர்! மோசடியில் ஈடுபட்டது அம்பலம்... உதவி செய்த களவாணி திரைப்பட நடிகர்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையை சேர்ந்த நபரை போலி ஆவணங்கள் மூலம் கனடாவுக்கு அழைத்து செல்ல முயன்ற விவகாரத்தில் பெண் உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த ஒருவர், போலி ஆவணங்களில் தயாரித்த பாஸ்போர்ட் மூலம், கனடாவுக்கு செல்ல உள்ளதாக, சென்னை, 'கியூ' பிரிவு பொலிசாருக்கு சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில், திருச்சியிலிருந்து வந்த பிரேம்குமார் என்பவரிடம், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.

அப்போது அவர், இலங்கையை சேர்ந்தவர் என்றும் போலி ஆவணங்களால் தயார் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்து, வெளிநாடு செல்ல இருந்ததும் தெரியவந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூர் ஓடக்காட்டைச் சேர்ந்தவர், ராஜ்மோகன் குமார் (40) பையிங் நிறுவனம் மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இவர் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க வர்த்தக அணி அமைப்பாளராக உள்ளார்.

இவர், பிரேம்குமாரிடம், 28 லட்சம் ரூபாய் பெற்று, போலி ஆவணங்கள் பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற உதவியதாக கூறப்படுகிறது.

கனடாவுக்கு, தொழில் நிமித்தமாக செல்லும்போது, 'விசிட்டிங்' விசா மூலம், அழைத்துச் சென்று, பிரேம்குமாரை அங்கு நிரந்தரமாக தங்க வைக்க, ராஜ்மோகன்குமார் திட்டமிட்டிருந்தார்.

இதையடுத்து ராஜ்மோகன் குமார், அவரது பெண் உதவியாளர் பாரதி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ராஜ்மோகன் நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

ராஜ்மோகன், தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும்போது, இதே பாணியில், ஏழு பேரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இதில், முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது.

ராஜ்மோகன், சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான களவாணி 2 படத்தில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்