தமிழர்கள் 7 பேர் விடுதலை விவகாரம்... பிரதமர் நரேந்திர மோடிக்கு பறந்த முக்கிய கடிதம்

Report Print Santhan in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் முடிவில் கவர்னர் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி இந்த விடுதலை விவகாரம் தொடர்பாக கடிதம் ஒன்று பறந்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம் திகதி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து செப்டம்பர் 9-ஆம் திகதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஆனால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக முதல்வரிடம் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அரசின் முடிவை உடனடியாக கவனித்து, விரைவில் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆவணம் செய்ய வேண்டும்.

8 சீக்கியப் போராளிகளை மத்திய அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதையும், பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதையும் வரவேற்பதாக ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

7 தமிழர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு நிராகரித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ரவிச்சந்திரன், பஞ்சாப் - தமிழக அரசியல் கைதிகள் விடுதலை விஷயத்தில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதாக கூறி உள்ளார்.

இந்த இரட்டை நிலை சரிசெய்யப்பட வேண்டும் என்றும், இந்தியா முழுவதும் இருக்கும் கைதிகளுக்கு சமமான நீதி வழங்க வேண்டும் என்றும் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers