கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞருக்கு கோலாகலமாக நடந்த திருமணம்..!

Report Print Vijay Amburore in இந்தியா

கொரோனா சந்தேகத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞருக்கு கோலாகலமாக திருமணம் நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் கடந்த மார்ச் 12 அன்று தனது நண்பருடன் பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

உலகெங்கிலும் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவும் பலத்த கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் அவர்கள் இருவரையும் 2 வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் மணமகன் வந்தடைந்த 7 நாட்கள் கழித்து அவருக்கு கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. இதில் தொழிலதிபர்கள், அதிகாரிகள் உட்பட 1000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது மணமகன் முகமூடி எதுவும் அணிந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும், திருமணம் நடத்துவது பெரும் ஆபத்து என உள்ளூர் சமூக ஆர்வலர் எச்சரித்தும் கூட, மணமகனின் மாமனார் செல்வாக்குமிக்க வழக்கறிஞர் என்பதால் அதனை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து, மாநில நிர்வாகம் அதற்கு பதில் கொடுத்துள்ளது.

திருமணத்தை நடத்துவது ஒரு பெரிய பொது சுகாதார ஆபத்து என்றும், இன்று திட்டமிடப்பட்ட வரவேற்பை நடத்துவதற்கு எதிராக குடும்பத்திற்கு அறிவுறுத்தப்படும் எனவும் கூறியிருந்தது.

இந்த நிலையில் திருமணத்திற்காக நடக்கவிருந்த வரவேற்பு நிகழ்வானது ரத்து செய்யப்பட்டு, மணமகன் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்