திருமணம் செய்யாமல் வாழ்வை வீணாக்கிட்டியே என வருத்தப்பட்டாங்க! இலங்கை தமிழர் நலனுக்காக வாழ்வை அர்பணித்த பெண்

Report Print Raju Raju in இந்தியா
4913Shares

தமிழகத்தில் கிறிஸ்டினா என்ற பள்ளி தலைமை ஆசிரியை இலங்கை தமிழ் பிள்ளைகள் மற்றும் தமிழக மாணவ, மாணவிகளுக்காக தன் வாழ்வையே சேவையாக அமைத்து கொண்ட விதம் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கரூரில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை கிறிஸ்டினா (53).

இவர் தான் பல இலங்கை தமிழ் பிள்ளைகள் உள்ளிட்ட பல மாணவ, மாணவிகளின் கல்வி கனவை நினைவாக்க அயராது உழைத்து வருகிறார்.

கிறிஸ்டினா கூறுகையில், 1997-ம் ஆண்டு ஆரம்பப்பள்ளியில இடைநிலை ஆசிரியராக நிரந்திர பணியில் சேர்ந்தேன்.

அப்போது சில வருடங்கள் எனக்கு சம்பளமே தரப்படவில்லை. அந்த சமயத்தில் பேருந்துக்கு கூட பணமில்லாமல் இருந்திருக்கிறேன்.

என் நிலையை பார்த்து பேருந்து நடத்துனர்கள் அவர்கள் பணத்தில் டிக்கெட் கொடுப்பார்கள்.

இதை பார்த்து தான் உதவி செய்வதின் ஆழம் எனக்கு புரிந்தது. பின்னர் 2015ல் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக பணியாற்ற தொடங்கினேன்.

2004-ம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக வந்தப்போது, ஹெச்ஐவி பாசிட்டிவ் காரணமாக பாதிக்கப் பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளை, மத்த பள்ளிகளில் சேர்க்காமல் விரட்டியடிப்பதைக் கேள்விப்பட்டேன்.

உடனே, அவர்களை தேடிப்போய் 13 பிள்ளைகளை எங்க பள்ளியில சேர்த்து கொண்டேன்.

என் கல்வி பணிக்கு தடங்கல் வரக்கூடாது என்பதால் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் பண்ணிக்காமல் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே என பலர் என்கிட்ட வருத்தமாக கேட்பாங்க.

திருமணம் செய்திருந்தால் 1,2 பிள்ளைகளுக்குத்தான் அம்மாவா இருந்திருப்பேன். இப்போது என் பள்ளியில் படிக்கிற 113 மாணவர்களுக்கும் நான் அம்மா.

கொரோனா லாக்டவுன் சமயமான கடந்த ஏப்ரல், மே மாதத்தில் என் சம்பளமான 1,60,000 ரூபாயில் இலங்கை தமிழர் முகாமில் உள்ள மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள், நிவாரண பொருட்களை வழங்கினேன் என கூறியுள்ளார்.

கிறிஸ்டினா குறித்து நாடோடி மக்கள் குழுவின் பிரதிநிதி ஜெயபால் கூறுகையில், அவர் எங்கள் மக்கள்கிட்ட தொடர்ந்து பேசி, எங்கள் குழந்தைகளை அவங்க பள்ளியில சேர்த்துப் படிக்கவெச்சாங்க. அதேபோல, ராயனூர் இலங்கை முகாமில் உள்ள பிள்ளைகளையும் அவர்களின் பள்ளியில சேர வைத்தார்கள்.

அதேபோல, முடிவெட்டாம போகும் மாணவர்களுக்கு, பள்ளி முடிஞ்ச மாலை நேரத்துல மேடமே முடிவெட்டி விடுவாங்க என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்