தமிழர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுங்கள்! இலங்கை வந்த வெளியுறவு அமைச்சர் கோரிக்கை

Report Print Santhan in இந்தியா
1194Shares

இலங்கை வந்திருக்கும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அதிகார பகிர்வு குறித்த தமிழ் சிறுபான்மையினத்தவரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் படி கூறினார்.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தாண்டின் முதல் வெளிநாட்டு பயணமாக இலங்கை வந்தடைந்தார்.

அப்போது அவர், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனாவுடன் சந்திப்பு நிகழ்த்தினார்.

இருவரும் கூட்டாக ஊடகங்களை சந்தித்தனர். அப்போது, எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றிற்கான திட்டங்கள் குறித்து விவாதித்ததாகவும், இத்திட்டங்கள் இலங்கையை தொற்றுநோயிலிருந்து மீட்பதை துரிதப்படுத்தும் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

சிங்களர், தமிழர் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைத்து இலங்கை குடிமக்களின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே உறுதிபூண்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனா கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், இருதரப்பு நம்பிக்கை, நலன், மரியாதை மற்றும் உணர்வு அடிப்படையில் இந்தியா எப்போதும் இலங்கைக்கு நம்பகமான நட்பு நாடாக இருக்கும்.

இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகிறோம். அதற்காக இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இலங்கையில் இன நல்லிணக்க நடவடிக்கைக்கு இந்தியா நீண்டகாலமாக ஆதரவளிக்கிறது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியம் என்ற தமிழ் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

இவை அரசியலமைப்பின் 13-வது திருத்தம், அதிகாரப் பகிர்வு போன்றவற்றிற்கு இலங்கை அரசாங்கம் அளித்த உறுதிக்கும் பொருந்தும். இதன் விளைவாக இலங்கையின் வளமும் வளர்ச்சியும் நிச்சயமாக முன்னேறும் என்று கூறினார்.

கடந்த 1987-ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை அமைதி உடன்படிக்கையின் விளைவாக 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திருத்தம் ஆகும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை பிரதமருடன் மெய்நிகர் உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போதும் 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மகிந்த ராசபக்ச அவரது சகோதரரும் அதிபருமான கோட்டாபய ராஜபக்சவும், சிங்கள பெரும்பான்மையின விருப்பத்திற்கு எதிராக செயல்பட முடியாது என்பதை சுட்டிக்காட்டினர் என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்