இந்தியாவில் நன்கு படித்த பெற்றோர் தங்களது இரண்டு மகள்களை நரபலி கொடுத்த சம்பவத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா.
எம்.எஸ்சி., பிஎச்டி பட்டம் பெற்ற புருசோத்தம், மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக இருக்கிறார்.
முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர்.
இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் முதல்வராக இருக்கிறார்.
இந்த தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவரான அலேக்கியா (27) முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைக்கல்லூரியில் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது கொரோனா விடுமுறை காரணமாக மகள்கள் இருவரும் மதனப்பள்ளியில் பெற்றோருடன் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், புருசோத்தமும், பத்மஜாவும் நேற்று முன்தினம் இரவு 2 மகள்களின் சம்மதத்துடன் வீட்டில் வைத்து பூஜை செய்திருக்கின்றனர்.
அப்போது ஒரு மகளுக்கு தலையை முழுவதுமாக மொட்டை அடித்திருக்கின்றனர். பின்னர், பாசத்தாய் பத்மஜா, ஒரு சூலாயுதத்தால் இளைய மகளை குத்திக்கொன்றிருக்கிறார். தொடர்ந்து, மூத்த மகளை ஒரு உடற்பயிற்சி எடைக்கருவியால் துடிதுடிக்க தாக்கி உயிரைப் பறித்திருக்கிறார்.
இருவரும் நிர்வாணமாக்கி கொல்லப்பட்டனர். அதையெல்லாம், தந்தை புருசோத்தம் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கிறார்.
ரத்த வெள்ளத்தில் மகள்கள் மாண்டபின், அதுகுறித்து புருசோத்தமே தன்னுடன் பணிபுரியும் ஒருவருக்கு தொலைபேசியில் கூறியிருக்கிறார்.
அதிர்ச்சி அடைந்தபோன அவர்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். விரைந்து சென்று புருசோத்தம் வீட்டை அடைந்த பொலிசார் உயிரற்ற சடலங்களாக இரு பெண்களையும் கண்டனர். சுற்றிலும் பல பூஜைப்பொருட்கள் காணப்பட்டன.
அப்போது கோபப்பட்ட கொடூர தாய்-தந்தை, ஏன் எங்கள் பூஜைக்கு நடுவில் வந்தீர்கள்? ஒருநாள் பொறுத்தால் தங்கள் மகள்கள் மீண்டும் உயிர்பெற்று விடுவார்கள் என்று கூறி அதிரவைத்துள்ளனர்.
மேலும் தனது இளையமகளின் தலைக்குள் தீயசக்தி இருந்தது எனவும் கூறினர்.
அப்போது அவர்கள் இருவரும் சிவப்பு நிற ஆடையில் இருந்துள்ளனர்.கணவன்-மனைவியை கைது செய்த பொலிசார் 2 பெண்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
பொலிசாரிடம் தம்பதி கூறுகையில், எங்களுக்கு சொர்க்கத்திலிருந்து தகவல் வந்தது, இது அற்புதங்களின் வீடு.
நிகழும் அற்புதத்துக்கு பிறகு உலகம் முழுவதும் நாங்கள் பேசப்படுவோம் என கூறியுள்ளனர்.
இதனிடையில் மகள்களை கொன்றபின், தாங்களும் தற்கொலை செய்துகொள்ள புருசோத்தமும், பத்மஜாவும் முடிவு செய்திருந்ததாகவும், மகள்களுடன் தாங்களும் திரும்பவும் உயிர்பெற்று விடுவோம் என்று நம்பிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் பொலிசார் உடனடியாக அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டதால் தற்கொலை தடுக்கப்பட்டுவிட்டது.
பத்மஜாவுக்கு வலிப்புநோய் உள்ளதாகவும், அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மகள்களை நரபலி கொடுத்தால் தாய்க்கு வலிப்பு சரியாகும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சாமியார் கூறிய ஆலோசனையின் பேரில் அவர்கள் இந்த முட்டாள்தனமான முடிவுக்கு வந்ததாகவும் ஒரு பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.