ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 பேரின் கதை

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

தங்களுடைய குடும்பத்திற்கு தாங்கள் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்ததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரேசிலை சேர்ந்த ஆறு ஓரினச்சேர்க்கையாளர்களின் வாழ்க்கையை பிரேசில் புகைப்படநிபுணர் நயரா லெய்ட் தனது புகைப்படங்கள் வழியாக விவரிக்கிறார்.

ஆறு பேரிடமும், அவர்கள் குழந்தை பருவத்தில் மகிழ்ச்சிகரமாக உள்ளதுபோல எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனக்கு அனுப்புமாறு லெய்ட் கூறியுள்ளார். அவர்கள் நிராகரிக்கப்பட்டதன் அனுபவத்தை பிரதிபலிக்கும் விதமாக அப்புகைப்படங்களை எரித்தார் லெய்ட். ஆறு பேரில் ஒருவர் மட்டும் புகைப்படத்தை கொடுக்கவில்லை ஏனெனில் அனைத்து புகைப்படங்களும் அவரது குடும்பத்தால் எரிக்கப்பட்டுவிட்டது.

கிளாரா

''எனது அம்மா என்னை கடுமையாக திட்டினார். அது மிகவும் மனரீதியாக துன்புறுத்தும் விஷயமாக இருந்தது. எனக்கு ஒரு குடும்பம் எப்போதும் கிடையாது என அவர் தெரிவித்தார்.''

''இப்படி இருப்பதால் சமூகத்தில் உன் மேல் தவறான அபிப்ராயம் உண்டாகும் அதனால் நீ கடுமையாக பாதிக்கப்படுவாய் என்பது தெரியுமா" என எனது தந்தை கேட்டார்.

"ஆம். எனக்கு தெரியும். நான் ஏற்கனவே காயப்பட்டிருக்கிறேன். நான் அதிகம் நேசித்தவர்களால் எனது வீட்டுக்குளேயே ஏற்கனவே காயப்பட்டிருக்கிறேன் என்றேன்''

இங்கிரிட்

''முதன்முதலில் என்னுடைய வீட்டில் இருந்து எனது தாத்தா என்னை வெளியேற்றியபோது, அவர் என்னை ஒரு பாலியல் தொழிலாளி போல நடத்தினார்''.

''எனது வீட்டுக்கு என்னுடைய பெண் தோழிகளை அழைத்துவந்தபோது அவர் சத்தம் போட்டு திட்டினார் மேலும் என்னை அறைந்தார்''.

''நான் காவல்துறையை தொடர்பு கொள்வேன் என மிரட்டினேன். பிறகு எனது பொருட்களை எடுத்துக்கொண்டு நான் வீட்டை விட்டு வெளியேறினேன்''.

லியோனார்டோ

''நான் ஒரு ஆண் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை எனது அம்மா கண்டுபிடித்தபோது அவர் அழத்தொடங்கினார், மயக்கமுற்றார்''.

''நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். எனது அம்மா வீட்டிற்கு திரும்பியவுடன் என்னை வீட்டைவிட்டு வெளியேற சொன்னார்''.

''நான் அவருடன் வாழ்வதை அவர் விரும்பவில்லை ஏனெனில் என் அம்மா எனது பாலியல் பண்பை ஏற்றுக்கொள்ளவில்லை''.

''அது எனக்கு மிகவும் வலியை ஏற்படுத்தியது. என்னுடைய அம்மா எனக்கு இப்படிச் செய்வார் என நான் கனவிலும் நினைத்ததில்லை'''.

தய்னா

''நான் ஒரு லெஸ்பியன் எனும் உண்மையை எனது தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியாததால் அவர் என்னிடம் அதன்பிறகு பேசவில்லை. என்னை வீட்டை விட்டு வெளியேற்றினார். மேலும் எந்த ஒரு பொருளையும் என்னை வீட்டில் இருந்து எடுத்துச் செல்லவிடவில்லை. அப்போது எனக்கு வயது 18''.

''நான் வீ்ட்டிலிருந்து வெளியேற்றப்பட்டபோது என்னிடம் ததும்பிய உணர்வுகளை விவரிப்பது மிகவும் கடினம். அச்சம்பவம் என்னை எப்படி பாதித்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும். ஏன் அப்படிச் செய்தார்கள் வீட்டை விட்டு வெளியேற்றும் அளவுக்கு அது ஒரு கொடிய விஷயமா என்பது குறித்து ஒரு முழுமையான காரணம் தெரியாதபோது மனது வலிக்கத்தான் செய்யும்.''

''நான் ஒரு நரகத்தில் நீண்டகாலம் இருந்தேன் என்பதை உணர்ந்தேன். ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது விருப்பத்தின் அடிப்படையில் என மக்கள் நினைக்கும்போது எனக்கு எரிச்சல் வரும். நாங்கள் சில காரணங்களால் ஓரினச்சேர்க்கையாளர் ஆக்கப்பட்டோம்''

வால்மிர்

''உண்மையில், நான் ஆண் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தது எனது பெற்றோரை கடுமையாக பாதித்தது''

'' அவர்கள் எனக்கு என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்பதை நான் முன்பே அறிந்திருக்கவில்லை. நான் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை'''

''நான் எனது ஆண் நண்பரை முத்தமிட்டதை பார்த்தபோது எனது தந்தை என்னை கடுமையாக அடித்து விளாசினார். எனது ஆடைகள் கிழிந்தன. இறுதியில் நான் ஆடையற்றவனாக ஆனேன்''.

''அவர் எனது கையை முறுக்கிச் சொன்னார் ' இன்றைக்கு நீ தெருவில்தான் உறங்கவேண்டும் என்று'.''

ருத்

''எனது தந்தை என்னை கொலை செய்ய முயற்சித்தார்''

'' என்னை தள்ளிவிட்டு ஒரு தொலைபேசி கேபிள் மூலம் என்னை தொங்கவிடத் துவங்கினார்''

'' எனது அம்மா அதைப் பார்த்ததும் ஒரு கண்ணாடி ஜாடியை எனது அப்பாவின் தலை மீது வீசினார். அப்போது மட்டும் எனது அம்மா இடையில் நுழைந்திருக்காவிட்டால் நான் கொல்லப்பட்டிருக்கக்கூடும்''

'' எனது அப்பா என்னுடைய அனைத்து உடைமைகளையும் எரித்தார். நான் அணிந்திருந்த உடையோடு மட்டும் வெளியேற்றப்பட்டேன்''.

- BBC - Tamil

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்