முழு குணமடைந்து வீடு திரும்பிய கொரோனா நோயாளிக்கு மீண்டும் நோய்த்தொற்று: அச்சத்தில் மருத்துவர்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

முழுவதும் குணமடைந்து வீடு திரும்பிய ஒரு கொரோனா நோயாளி, அடுத்த 10 நாட்களில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது..

இம்மாத ஆரம்பத்தில் பெயர் வெளியிடப்படாத கொரோனா நோயாளி ஒருவர், சீன நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் அடுத்த 10 நாட்களில் உடன்நிலை சரியில்லாமல் மருத்துவமனை திரும்பிய அவருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் குணமடைந்ததாக வீடு திரும்பிய பலரும் ஆபத்தான வைரஸுடன் சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், நோயாளி குணமடைந்ததாக அறிவிப்பதற்கு முன்பு மருத்துவர்கள் துல்லியமான வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

அந்த நபர், தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டூவில் வசிப்பதாக People's Daily பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

குணமடைந்து வீடு திரும்பியிருந்தாலும் கூட, அந்த நபரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தனிமையில் இருந்ததாக சமூக அதிகாரிகள் கூறுகின்றனர். பெப்ரவரி 19 ஆம் திகதி வரை குடும்பத்தினர் தங்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை.

தற்போது மொத்த குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தியானது சீனா ஊடகங்களில் வெளியானதை அடுத்து, பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்