கைவிடப்பட்ட நிலையில் இறந்து கிடக்கும் கொரோனா நோயாளிகள்! சோதனை செய்த போது கண்ட துயரம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் கொரோனாவிடம் சிக்கி தவித்து வரும் நிலையில், முதியவர்கள் சிலர் மெத்தைகளில் இறந்த நிலையில் கிடந்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி, ஒட்டு மொத்த உலகையும் ஆட்டி படைத்து வருகிறது.

இதில் ஐரோப்பிய நாடுகளான, இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், தற்போது ஸ்பெயினும் இணைந்துள்ளது.

ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 42,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2,991 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 514-ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளது.

இதனால், ஸ்பெயினில் உள்ள ஓய்வு இல்லம் ஒன்றில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய இராணுவம் அழைத்து வரப்பட்டது.

ராணுவம் அங்கு சென்று, சோதனை செய்தபோது சில முதியோர் இல்லங்கள் அவர்கள் கவனிப்பின்றி இருந்ததாகவும், சிலர் மெத்தையில் இறந்து கிடந்ததாகவும் ஸ்பெயினின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபல்ஸ் தெரிவித்துள்ளார்.

சில இல்லங்களில் முதியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை விட்டுச் சென்றுவிட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இயல்பான சூழலில் இறுதிச் சடங்கு சேவைகள் வந்து உடலை பெற்றுக் கொள்ளும் வரை உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். இருப்பினும் கொரோனாவால் உயிரிழந்திருப்பார்கள் என்று சந்தேகம் இருந்தால், சரியான உடை மற்றும் பாதுகாப்பு கவசத்துடன் அந்த உடல்கள் இருக்கும்.

இறுதிச்சடங்கு செய்வதற்காக நபர்கள் வரும் வரை உடல்கள் கவனிப்பின்றி படுக்கையில் கிடக்கும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால், முதியோர் இல்லங்கள் மீது தான் அரசாங்கம் முதலில் கவனம் செலுத்தவுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த மையங்களை தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேட்ரிட்டில் நெருக்கடி அதிகரித்துள்ளதாலும், பாதுகாப்பு கவசங்கள் போதுமானதாக இல்லை என்பதாலும் செவ்வாய்க்கிழமையில் இருந்து அந்நகரின் மாநகராட்சி இறுதிச் சடங்கு சேவை நிறுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஸ்பெயினில், விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ் மைதானத்தை கொரோனாவால், உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்காக தற்காலிகமாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்