தடை செய்யப்பட்ட கப்பல்... சுங்க அதிகாரிகளால் 10 முறை எச்சரிக்கை: 135 பேர் கொல்லப்பட காரணமான பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 135 பேர் கொல்லப்பட காரணமான ரசாயனம், அதிகாரிகளால் தடை செய்யப்பட்ட கப்பலில் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு குறைபாடுகள் காரணமாக லெபனான் அதிகாரிகள் 2013 ஆம் ஆண்டில் பயணத்தைத் தொடர தடை விதித்த எம்.வி.ரோசஸ் என்ற சரக்குக் கப்பலில் இந்த ரசாயனம் பெய்ரூட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான இந்த கப்பலின் மாலுமிகள் உள்ளிட்ட 10 ஊழியர்களை நாடு திரும்ப லெபனான் அதிகாரிகள் அனுமதித்திருந்தாலும், அதன் பின்னர் உரிமையாளரால் கைவிடப்பட்ட குறித்த கப்பல் பெய்ரூட் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சரக்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட ரசாயனத்தின் பேராபத்து தொடர்பில் லெபனான் சுங்க நிர்வாகம் நாட்டின் நீதித்துறையை 2014 மற்றும் 2017 க்கு இடையில் பத்து முறை எச்சரித்துள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மிக சமீபத்தில், சுங்க இயக்குனர் பத்ரி இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் நீதிபதியிடம் அந்த சரக்குகளை அப்புறப்படுத்துவது குறித்து விரைவான முடிவை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் பின்பற்றாமல் சேமிக்கப்பட்டுள்ள இந்த ரசாயனம் பயங்கரவாதிகளிடம் சிக்க வாய்ப்புள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் அஞ்சியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்