ஆப்கானிஸ்தானின் பாமியானில் நடந்த இருவேறு குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 45 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான சந்தைப்பகுதியிலேயே இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் முக்கியமாக ஷியா ஹசாரா இன சிறுபான்மையினரின் குடியிருப்புகளும் அமைந்துள்ளது.
இந்த தாக்குதலில் சிறார்கள் உள்ளிட்ட 12 அப்பாவி பொதுமக்களும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
பரபரப்பான சந்தைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதிகளின் இந்த கொடுஞ்செயல் மன்னிக்க முடியாத குற்றம் என அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் தலிபான் அமைப்பானது தங்களுக்கு இந்த வெடிகுண்டு தாக்குதலில் தொடர்பில்லை என மறுத்துள்ளது.
உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுற்றுலா தலமான பாமியன், ஆப்கானிஸ்தானில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றாக நீண்டகாலமாக மதிக்கப்பட்டு வந்துள்ளது.
பாமியன் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் உள்ளூர் பழங்குடியினரான ஹசாரா, தொடர்ந்து தலிபான்களை எதிர்த்து வந்தது, மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஹசாரா மக்களை படுகொலை செய்தனர்.
முக்கியமாக ஷியா சிறுபான்மையினர் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் ஆதரவு குழுக்களாலும் 1990 களில் தலிபான்களாலும் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, அரசாங்கப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான கடும் சண்டையில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஏறக்குறைய 6,000 ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர்.