பிரேசிலில் முதல் முறையாக ஒரே நாளில் 4000-க்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் இறந்துள்ளனர்.
பிரேசில் தற்போது உலகிலேயே கொரோனாவால் இரண்டாவது அதிக பாதிப்புகளை கொண்ட நாடாக பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதேபோல் இறப்பு எண்ணிக்கையிலும் அமெரிக்காவையடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
அந்நாட்டில் இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பிரேசிலில் 4,195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதன் மூலம் அந்நாட்டின் மொத்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 337,000-த்தை கடந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 66,570 பேர் இறந்துள்ளனர். இது அதற்கு முந்தைய மாத இறப்பு எண்ணைக்கையை விட இருமடங்கு என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை லட்சம் மக்கள் இறந்தபிறகும், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட பிறகும், அந்நாட்டு ஜனாதிபதி Jair Bolsonaro, நாட்டில் ஊரடங்கை பிறப்பிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.
மேலும், வைரஸால் ஏற்படும் விளைவுகளை விட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சேதம் ஏற்படும் என பேசிவருகிறார். அதுமட்டுமின்றி உள்ளூர் அதிகாரிகள் விதித்துள்ள சில விதிமுறைகளையும் நீக்க முயற்சித்துவருகிறார்.
அவரது மெத்தனப்போக்கான நடவடிக்கைகள் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.