தன்னை நீக்கிய அவுஸ்திரேலிய கேப்டனை பழிதீர்க்க நினைத்த ஷேன் வார்னே! அவரே கூறிய தகவல்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில், தன்னை நீக்கிய அப்போதைய அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் வாஹை பழிதீர்க்க நினைத்ததாக ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, தற்போது தன்னுடைய புத்தகத்தில் முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் வாஹ் குறித்து எழுதியுள்ளார்.

பிரபல பத்திரிகையான டைம்ஸ் தற்போது அந்த புத்தகத்தின் சிறிய பகுதியை வெளியிட்டுள்ளது. கடந்த 1999ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் தொடரில், துணைத்தலைவராக இருந்த ஷேன் வார்னே 3 டெஸ்டில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்ததால், அணித்தலைவர் ஸ்டீவ் வாஹ் அவரை நீக்கினார்.

இது குறித்து ஷேன் வார்னே புத்தகத்தில் கூறுகையில், ‘இது என்னை உடைந்து போகச் செய்தது. ஸ்டீவ் வாஹ் ஒரு சுயநலவாதி. அவருக்கு ஒரு நண்பராக ஆதரவு தெரிவித்தும் என்னை அவர் ஆதரிக்கவில்லை. என்னை அணியிலிருந்து நீக்கிய ஸ்டீவ் வாஹை பழிதீர்க்க காத்திருந்தேன்’ என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் வாஹ் பீல்டிங் செய்யும்போது கில்லெஸ்பியுடன் மோதியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

ஆனால், 2வது டெஸ்ட் போட்டியில் தான் ஆட வேண்டும் என ஸ்டீவ் பிடிவாதம் பிடித்ததாக வார்னே கூறியதுடன், ‘நான் அப்போது பழிதீர்க்க ஆசைப்பட்டேன். அப்போது என்னை அவர் ஆதரிக்கவில்லை. இப்போது அவர் ஆடக்கூடாது என்று நான் நினைத்தேன்’ என புத்தகத்தில் எழுதியுள்ளார்.

எனினும், பயிற்சியாளர் மார்ஷ் அப்போது ஸ்டீவ் வாஹ் பக்கம் நின்றதால், தனது பழிதீர்ப்பு நிறைவேறவில்லை என ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers