விராட் கோஹ்லி இணையதளத்தை முடக்கி எச்சரிக்கை விடுத்த ஹேக்கர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோஹ்லியின் இணையதளம் ஒன்றை வங்கதேசம் ஹேக்கர்கள் முடக்கி, ஆசியக்கிண்ணம் இறுதிப்போட்டியில் அவுட் வழங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதில், `டியர் ஐசிசி, கிரிக்கெட் விளையாட்டு ஜெண்டில்மேன் விளையாட்டு இல்லையா? இது எப்படி அவுட் என்று கூறுங்கள்? நீங்கள், இந்த உலகத்திடம் மன்னிப்பு கேட்டு, குறிப்பிட்ட நடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால், இணையதளம் மீண்டும் மீண்டும் ஹேக் செய்யப்படும். இந்திய சகோதர சகோதரிகளே, உங்களை அவமானப்படுத்த இதனை நாங்கள் செய்யவில்லை.

நீங்களும் சிந்தித்து பாருங்கள். உங்கள் அணிக்கு இப்படி ஒரு அநீதி நடந்தால் உங்களது உணர்வுகள் எப்படி இருக்கும்? விளையாட்டில் அனைத்து அணிகளும் சமமாக ட்ரீட் செய்யப்பட வேண்டும். இறுதி வரை இதற்காக நாங்கள் போராடுவோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இணையதளத்தை ஹேக் செய்தது, சி.எஸ்.ஐ சைபர் ஃபோர்ஸ் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த வாரம் முடிவடைந்த ஆசியக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆனால், வங்கதேச ரசிகர்கள் இன்னும் அந்தத் தோல்வியில் இருந்து வெளிவரவில்லை என்று தான் தெரிகிறது.

இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், 117 பந்துகளில் 121 ஓட்டங்கள் எடுத்தார். இவரது சதத்தின் உதவியுடன் வங்கதேச அணி 222 ஓட்டங்கள் குவித்தது.

லிட்டன் தாஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் டோனியால் ஸ்டெம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டார்.

முதலில் களத்தில் இருக்கும் நடுவருக்குக் குழப்பம் வரவே, முடிவு மூன்றாவது நடுவருக்கு மாற்றப்பட்டது. நீண்ட நேர ஆய்வுக்குப் பின்னர் நடுவர் அவுட் என்று அறிவித்தார்.

எனினும் வங்கதேச ரசிகர்கள், நடுவர்கள் தவறான தீர்ப்பு வழங்கியதாகவும், வங்கதேச அணியின் தோல்விக்கு அதுவே காரணமாக அமைந்துவிட்டதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers