உயர்ந்த அன்பு

Report Print Balamanuvelan in ஆன்மீகம்
102Shares
102Shares
ibctamil.com

நண்பனுக்காய் உயிரை கொடுப்பதிலும் பெரிய அன்பு எதுவும் இல்லை என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது.

பாபு கோபு என்று இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். பாபு சாந்தமே வடிவானவன். கோபு முன்கோபி.

இந்த முன்கோபி எப்போது பார்த்தாலும் ஏதாவது வம்பிழுத்து வருவதும் அவனது நண்பன் அவனுக்காக மன்னிப்புக் கேட்பதும் அபராதம் செலுத்துவதும் வழக்கம்.

ஒரு நாள் நள்ளிரவில் வீட்டுக்கதவு படபடவென தட்டப்படும் ஓசை கேட்டு எழுந்த பாபு கதவைத்திறந்தான். அங்கே கோபு கைகளிலும் சட்டையிலும் இரத்தக் கரையுடன் நிற்பதைக் கண்டான்.

என்ன நடந்தது என்று விசாரித்தபோது, தான் ஒருவனிடம் சண்டையிட்டதாகவும், கோபத்தில் அவனை அடித்ததில் அவன் இறந்து போனதாகவும் கோபு கூறியதைக் கேட்டு அதிர்ந்துபோனான் பாபு.

பின்னே போலிஸ் வாகனம் வரும் சத்தம் கேட்டது. பயந்து நடுங்கிய கோபு தன்னைக் காப்பாற்றும்படி பாபுவிடம் கெஞ்சினான்.

பாபுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. போலிஸ் நெருங்கி விட்டது. கோபுவை உள்ளே இழுத்துவிட்டு கதவை அடைத்த பாபு, கோபுவிடம் உன் சட்டையைக் கழற்று என்றான். சட்டையை கழற்றி பாபுவிடம் கொடுத்துவிட்டு கோபு வீட்டிற்குள் சென்று கைகளைக் கழுவினான்.

சற்று நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கோபுவின் சட்டையை அணிந்து கொண்ட பாபு கதவைத் திறந்தான். அங்கே போலிசார் நின்றார்கள். இரத்தக்கரை படிந்த சட்டையை போட்டுக் கொண்டிருந்த பாபுவைக் கைது செய்த போலிஸார் அவனைப் போலிஸ் வாகனத்தில் ஏற்றினார்கள்.

தான் செய்த குற்றத்திற்காக ஒரு பாவமும் அறியாத தன் நண்பன் தண்டிக்கப்படப்போவதை எண்ணி கேவிக் கேவி அழுதான் கோபு.

ஒரு வார்த்தை தன் நண்பனிடம் பேச வேண்டும் என அனுமதி பெற்றுக்கொண்ட பாபு, கோபுவின் அருகில் வந்தான். இனியாவது தவறு செய்யாதே என்று கூறிவிட்டு மீண்டும் போலிஸ் வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டான். கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.

தனக்காகவே உயிரை கொடுத்த நண்பனை எண்ணி எண்ணி கண்ணீர் விட்டான் கோபு. அழுதால் போன உயிர் திரும்ப வந்துவிடுமா என்ன?

நண்பர்களே, தன் நண்பனுக்காக உயிரைத் தருவதிலும் பெரிய அன்பு எதுவும் இல்லை என்று இயேசு கூறியுள்ளார். நல்லவனுக்காக ஒருவன் இறக்கத் துணியலாம், ஆனால் தீமையே உருவான ஒருவனுக்காக யாராவது உயிரை விடுவார்களா?

இந்த வசனத்தைக் கூறிய இயேசு தாம் சொன்னபடியே செய்தார். நாம் பாவிகளாயிருக்கையில் நமக்காக உயிரையே கொடுத்தார். நாம் செய்த தவறுகளுக்கான தண்டனைஅயை அவர் ஏற்றுக்கொண்டார்.

நாம் பாவிகளாயிருக்கையில்* கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். - (ரோமர் 5:8)

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்