தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்படும் அமோனியம் சல்பேட்டை பிரித்தெடுத்து வெடி பொருளாக பயன்படுத்த முடியும் என்பதால், அதற்கு அங்கு அதிக பணம் கிடைப்பதாலே இது கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகை மாவட்டத்தின் கோடியக்கரையிலிருந்து, இலங்கைக்கு அதிவேக படகு மூலம் அரைமணி நேரத்தில் சென்றுவிட முடியும். இதனால் இந்த வழி கடத்தல் தொழிலுக்கு மிகவும் முக்கிய தலமாகப் பயன்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போருக்குப் பின்னர் கொஞ்சம் இடைவெளிவிட்டிருந்த கடத்தல் தொழில் தற்போது மீண்டு தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் இந்த பகுதியில் தங்கம் மற்றும் மருந்து பொருட்கள் போன்றவை அடிக்கடி பிடிபடுகின்றன.
சமீபத்தில் கூட வேதாரண்யம் அருகில் திருத்தலைக்காடு கடற்கரையோரம் சுமார் 6 லட்சம் மதிப்புள்ள வெடிபொருள்கள் சிக்கின. ஆனால் இதில் தொடர்புடைய கடத்தல்காரர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று கோடியக்கரை கடலோரத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 965 கிலோ அமோனியம் சல்பேட் பிடிபட்டிருக்கிறது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், தமிழ்நாட்டில் விவசாயிகள் களைக்கொல்லியாகப் பயன்படுத்தும் அமோனியம் சல்பேட்டை பயன்படுத்துகிறார்கள். இதை இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு உரமாக இடுவதற்கு கடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், அமோனியம் கல்பேட்டைப் பிரித்தெடுத்து வெடிபொருளாகப் பயன்படுத்த முடியும். இலங்கையில் இதற்கு மிக அதிகமாகப் பணம் கிடைப்பதால் இதைக் கடத்துவதற்குத் தயார்படுத்தியிருக்கிறார்கள். எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலை வைத்துப் பிடித்திருக்கிறோம். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.