இலங்கையிலிருந்து கள்ளத்தனமாக பல கோடி மதிப்பில் கடத்தியது உண்மையா? இலங்கை வீரர் ஜெயசூர்யாவின் பதில்

Report Print Santhan in இலங்கை

இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா இந்தியாவிற்கு அழுகிய பாக்குகளை கள்ளத்தனமாக விற்பனை செய்த புகாரில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், தன்னைப் பற்றி வரும் செய்தி தவறானது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சனத் ஜெயசூர்யா(49) இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் (6973 ஓட்டங்கள்), 445 ஒருநாள் (13430 ஓட்டங்கள்), 31 டி-20 (629 ஓட்டங்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

1996-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி வெற்ற நிலையில், அந்தணியில் ஜெயசூர்யாவும் இருந்தார்.

அதன் பின் இந்தியாவில் உள்ளூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடிய இவர், 2012-ஆம் ஆண்டு

இலங்கை அரசியலில் நுழைந்தார். இதையடுத்து 2013-ல் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுத்தலைவராக பொறுப்பேற்றார்.

அதன் பின் இலங்கை அணி 2014-ஆம் ஆண்டில் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்திலும் வெற்றி மேல் வெற்றியாக குவித்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி.யின் ஊழல் தடுப்பு பிரிவுக்குகுழு ஜெயசூர்யா மீது குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்தியாவுக்கு அழுகிய பாக்குகளை இலங்கையில் இருந்து விற்பனை செய்த வழக்கில் ஜெயசூர்யா சிக்கியுள்ளதாகவும், இவர் மட்டுமின்றி இந்த விவகாரத்தில் மேலும் இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

அதாவது சமீபத்தில் நாக்பூரில் பல லட்சம் மதிப்பிலான பாக்குகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றினர். இதை வைத்திருந்த தொழிலதிபர், ஜெயசூர்யாவின் பெயரை விசாரணையில் தெரிவித்ததாகவும், இதனால் இலங்கை அரசுக்கு இது தொடர்பாக ஜெயசூர்யா, மற்றும் மேலும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் வரும் டிசம்பர் 2-ஆம் திகதி மும்பையில் நடக்கும் விசாரணையில் பங்கேற்க உத்தரவிட கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த பாக்குகள் இந்தோனேஷியாவில், இந்தியாவுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்தால், 108 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும்.

ஆனால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்தாலோ, தெற்காசிய இலவச ஏற்றுமதி பகுதி என்பதால், 108 சதவீத இறக்குமதி வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

இதனால் ஜெயசூர்யா தனது புகழை பயன்படுத்தி, இந்த பாக்குகள் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டவை என போலியான ஆவணங்களை தயார் செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்.

இதனால் 100 கோடி மதிப்பிலான இந்த பாக்குகளை வெறும் 25 கோடிக்கு நாக்பூர் தொழிலதிபர் இறக்குமதி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகியதால், இது குறித்து ஜெயசூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில், தன்னைப் பற்றி தற்போது வெளியாகியுள்ள செய்தி உண்மையற்றது. நான் பாக்கு சம்பந்தமாக எந்த ஒரு தொழிலும் செய்யவில்லை. தன் புகழுக்கு பங்கம் விளைவுக்கும் வகையில் இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளதால், இது பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers