குண்டுவெடிப்பில் கணவன் மற்றும் பிள்ளையை இழந்து தவிக்கும் தமிழ்பெண்... திருமணமான 2 மாதத்தில் கலங்கும் புதுமாப்பிள்ளை

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பில் கணவர் மற்றும் மகனை இழந்துள்ள பெண் 7 வயது மகளை வைத்து கொண்டு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.

கல்லடியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் மனைவி சந்திரிகா (35). தம்பதிக்கு மிரூஜன் என்ற மகனும், ரெக்‌ஷிகா (7) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 21ஆம் திகதி Zion தேவாலயத்துக்கு நால்வரும் சென்றனர். அப்போது சந்திரிகா மற்றும் ரெக்‌ஷிகா ஆகிய இருவரும் தேவாலயத்தின் உள்ளே சென்றனர்.

சசிகுமார் மற்றும் மிரூஜன் ஆகிய இருவரும் அங்குள்ள புல்வெளியில் உணவு பரிமாறும் இடத்தில் இருந்தனர்.

அப்போது தான் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்தாரி அங்கு வந்தான்.

அப்போது ரமேஷ் என்பவருக்கு அவன் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் விசாரித்துள்ளார். அப்போது தான் ஞானஸ்நானம் எடுத்து கிறிஸ்துவனாக மாற வந்துள்ளேன் என அவன் கூறினேன்.

அவனை ரமேஷ் தடுத்து நிறுத்திய நிலையில் சசிகுமாரும் அவனிடம் விசாரித்தார். அந்த நொடி பொழுதில் அந்த நபர் வெடிகுண்டை வெடிக்க செய்தான்.

இதில் சசிகுமார் மற்றும் மிரூஜன் ஆகிய இருவரும் உடல்கள் துண்டாகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் சசிகுமாரின் மனைவி சந்திரிகா மற்றும் மகள் ரெக்‌ஷிகா ஆகிய இருவரும் உயிர் பிழைத்த நிலையில் தற்போது சந்திரிகா செய்வதறியாமல் தவித்து வருகிறார்.

சந்திரிகா கூறுகையில், என்னிடம் வெறும் சவப்பெட்டியை மட்டும் தான் கொடுத்தார்கள்.

இருவரின் உடல் பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

அடுத்து என்ன என எனக்கு தெரிவில்லை, என் மகளை வளர்க்க வேண்டும்.

அந்த சமயத்தில் பொம்மையுடன் விளையாடி கொண்டிருந்த சிறுமி ரெக்‌ஷனா தனது தாயிடம், அப்பா மற்றும் அண்ணன் உபயோகப்படுத்திய உடைகளை என்ன செய்ய போகிறீர்கள்? தேவையானவர்களிடம் அதை கொடுத்து விடுங்கள் என கூறினார்.

அதே போல ரிபிகா (26) என்ற இளம்பெண் குண்டுவெடிப்பில் சிக்கி அவரின் முகம் முழுவதிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதோடு, கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ரிபிகாவின் கணவர் நிரோஷன் கூறுகையில், எங்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது, ரிபிகாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ள கொழும்புக்கு அழைத்து செல்ல கோரியுள்ளோம்.

இனியும் நாங்கள் தேவாலயத்துக்கு செல்ல வேண்டுமா? என் மனைவி ரிபிகா பழைய நிலைக்கு மாறியவுடன் மீண்டும் செல்வோம் என கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்