காருக்குள் சிக்கிக் கொண்ட இரண்டு மாதக் குழந்தை: மீட்க போராடிய பொலிசார்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இரண்டு மாதக் குழந்தை ஒன்றை காருக்குள் வைத்துவிட்டு தவறுதலாக பூட்டிவிட்டதால் அதன் தாய் வேறு வழியின்றி பொலிசாரின் உதவியை நாட வேண்டியதாயிற்று.

அந்த குழந்தையின் தாய் அந்த டெஸ்லா காரை ஒரு அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் ஒன்றில் பார்க் செய்து விட்டு அவளும் அவளது தோழியும் காரை விட்டிறங்கி முன்பக்க கதவுகளை பூட்டிவிட்டு பின் சீட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையை எடுக்க சென்றிருக்கிறார்கள்.

அப்போதுதான் பின் பக்க கதவுகளும் பூட்டப்பட்டிருப்பதையும் தாங்கள் காரின் சாவியை காருக்குள்ளேயே விட்டு விட்டதையும் கவனித்திருக்கிறார்கள்.

அந்த கார் ஒரு டெஸ்லா கார் ஆனதால் அதை இண்டர்நெட் உதவியாலேயே திறந்திருக்க முடியும், ஆனால், அண்டர் கிரவுண்ட் பார்க்கிங்கில் பார்க் செய்திருந்ததால் அது சாத்தியமில்லாமற்போயிற்று.

ஒரு தீயணைப்பு கருவி முதல் கையில் கிடைத்த எல்லா பொருட்களையும் எடுத்து கார் கண்ணாடியை உடைக்க முயன்றபோதும் அவர்களால் கண்ணாடியை உடைக்க முடியவில்லை.

பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, பொலிசார் வந்து ஒரு சுத்தியலால் கண்ணாடியை உடைக்க முற்பட்டபோது சுத்தியலே உடைந்து போனது.

கடைசியாக அவர்களால் ஒரு கடப்பாறை உதவியால்தான் கார் கதவைத் திறக்க முடிந்திருக்கிறது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் குழந்தை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் நடந்த எதுவுமே அதற்கு தெரியாது.

பின்னர் பொலிசாரிடம் பேசிய அந்தக் குழந்தையின் தாய், அந்த டெஸ்லா கார் கண்ணாடி, குண்டு துளைக்காத கண்ணாடி என்றும் தனக்கு அது தெரியாது என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers