முதியவரை சிக்கலில் சிக்க வைத்த சீஸ் பாக்கெட்: எவ்வளவு செலவு வைத்தது தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்கச் சென்ற முதியவரின் பையில் இருந்த ஒரு சீஸ் பாக்கெட்டை அவர் திருடியதாக பாதுகாவலர் ஒருவர் குற்றம் சுமத்த, கடைசியில் அந்த சிக்கலில் இருந்து தப்புவதற்காக 10,000 ஃப்ராங்குகள் வரை அவர் செலவு செய்ய வேண்டியதாயிற்று.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் Denner சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.

120 ஃப்ராங்குகள் மதிப்பிலான பொருட்களை வாங்கிவிட்டு கிளம்பும்போது பாதுகாவலர் ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தி அவரது பையை சோதனையிட்டார்.

அப்போது பில்லில் வராத ஒரு 1.95 ஃப்ராங்குகள் மதிப்புடைய சீஸ் பாக்கெட் ஒன்று பையின் அடிப்பகுதியில் இருப்பதை அந்த பாதுகாவலர் கண்டார்.

உடனடியாக அவருக்கு 150 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டதோடு இரண்டு ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலுள்ள எந்த Denner சூப்பர் மார்க்கெட்டிற்குள்ளும் அவர் நுழையக் கூடாதென்று அவருக்கு தடையும் விதிக்கப்பட்டது.

ஆனால் அந்த சீஸ் பாக்கெட் எப்படி பைக்குள் வந்தது என்று அந்த முதியவருக்கு தெரியவில்லை. ஒருவேளை முந்தின முறை கடைக்கு வந்தபோது வாங்கின சீஸ் பாக்கெட்டாக அது இருக்கும் என அவர் கருதுகிறார்.

ஒரு நாள் நடந்து சென்று கொண்டிருந்த அந்த முதியவர் இன்னொரு Denner சூப்பர் மார்க்கெட் பக்கம் செல்லும்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மற்றும் பழங்களைக் கண்டதும் அவற்றைப் பார்ப்பதற்காக கடையின் அருகில் சென்றிருக்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக அந்த கடையில் பாதுகாப்புக்காக நின்றது முன்பு அவரை இன்னொரு Denner சூப்பர் மார்க்கெட்டில் திருடன் என பழி சுமத்திய அதே பாதுகாவலர்.

அந்த முதியவர் சட்ட விரோதமாக கடைக்குள் நுழைந்ததாக அந்த பாதுகாவலரை பணியில் நியமித்த பாதுகாப்பு நிறுவனம் வழக்கு தொடர, அவருக்கு 500 ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.

அதுபோக வழக்கு செலவுக்காக அவர் 1000 ஃப்ராங்குகள் கட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தப்பட்டார்.

வழக்கும் மேல் முறையீடுமாக இறுதியில் 150 ஃப்ராங்குகள் அபராதமும் 2,500 ஃப்ராங்குகள் வழக்கு செலவுக்கான கட்டணமும் செலுத்திய அந்த முதியவர் இந்த வழக்குக்காக செலவிட்ட மொத்த தொகை 10,000 ஃப்ராங்குகள்.

இதற்கிடையில் அந்த குறிப்பிட்ட பாதுகாப்பு நிறுவனம் தற்போது Denner சூப்பர் மார்க்கெட்டின் பாதுகாப்பு பணியில் இருந்து விலகி விட்டது.

தற்போது முதியவர் மீது தொடரப்பட்ட வழக்கிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ள சூப்பர் மார்க்கெட் நிறுவனம் அவரிடம் மன்னிப்புக்

கோரியுள்ளதோடு, அவர் செலவிட்ட மொத்த தொகையையும் திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers