ஐரோப்பிய ஒற்றுமையை வலிமைப்படுத்தும் கொரோனா தொற்று: சுவிட்சர்லாந்துக்காக பிரான்சின் நல்லெண்ண நடவடிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஒரு புறம் கொரோனாவால் நாடுகள் எல்லைகளை மூடுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்றாலும், இயற்கை சீற்றங்களின்போது பகையைக் கூட மறந்து ஒருவருக்கொருவர் உதவுவதுபோல, ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று நேசக்கரம் நீட்டத் துவங்கியுள்ளன.

ஜேர்மனி, பிரான்சிலுள்ள கொரோனா நோயாளிகளுக்கு தனது மருத்துவமனைகளை திறந்துவிட்டது பலரும் அறிந்ததே.

இந்நிலையில், தன் பங்குக்கு பிரான்ஸ், சுவிட்சர்லாந்துக்காக நல்லெண்ண செயல் ஒன்றைச் செய்துள்ளது.

நாட்டில் மாஸ்குகளைப் பதுக்குவதால், அவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பிரான்ஸ் அரசே, மொத்த மாஸ்க் உற்பத்தி முதல் விநியோகம் வரை அனைத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டது.

ஆனால், தற்போது கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டுள்ள பிரான்ஸ், சுவிட்சர்லாந்துக்கு மாஸ்குகள் கொண்டு செல்லும் இரண்டு கப்பல்களுக்கு அனுமதியளித்துள்ளது.

மாஸ்குகள் மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது உண்மைதான் என்றாலும், அவை கொரோனாவுக்கெதிராகப் போராடிவரும் அக்கம் பக்கத்து நாடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கான நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டவை அல்ல என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நமக்குள் ஒற்றுமை எப்போதும் அவசியம் என்றும், பிரான்சும் சுவிட்சர்லாந்தும் கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்கான பணியில் பல்வேறு வகையில் ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, இரு நாடுகளுக்குமிடையிலான எல்லைகள் வழியாக குடிமக்கள் முதல் பொருட்கள் வரை சென்று வர தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு நாளும் சுகாதாரத்துறை ஊழியர்கள் இரு நாடுகளுக்குள்ளும் சென்று வருவதை இரு நாடுகளும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

சுவிஸ் மருத்துவமனைகள், சில பிரான்ஸ் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர்களுக்கு உதவும் வகையில், சில கொரோனா வைரஸ் நோயாளிகளை ஏற்றுக்கொண்டுள்ளன.

சமீபத்திய நடவடிக்கையாக, நேற்று, பிரான்சிலிலிருந்து 20 நோயாளிகள் சுவிட்சர்லாந்தின் எட்டு மாகாணங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று பிரான்ஸ் தூதர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்