சுவிட்சர்லாந்தில் பொதுமக்களால் பயன்படுத்தப்படும் மாஸ்குகள் பெரும்பாலும் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு மாஸ்க், பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கவேண்டுமானால், அது மூன்று சோதனைகளில் வெற்றிபெறவேண்டும்.
காற்று உட்புகத்தக்க வகையில் மாஸ்க் அமைந்துள்ளதா, தும்மும்போது அதிலிருந்து தெறிக்கும் துகள்களை மாஸ்க் தடுக்கிறதா மற்றும் வடிகட்டுகிறதா என மூன்று விடயங்கள் ஒரு மாஸ்கில் கவனிக்கப்படுகின்றன.
பொதுவாக இரண்டு வகை மாஸ்குகள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும், அறுவை சிகிச்சைகளின்போது பயன்படும் Surgical masks என்னும் மாஸ்குகள் மற்றும் respirators என்னும் வகை மாஸ்குகள்.
பொதுமக்கள் அணியும் மாஸ்குகளும் பெரும்பாலும் Surgical masks என்னும் வகையின் கீழ் வரும், அல்லது துணி மாஸ்குகள் என்ற வகையின் கீழ் வரும்.
இவை மாஸ்க் அணிந்தவரைவிட மாஸ்க் அணிந்தவரின் அருகில் வருபவரை பெரும்பாலும் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
அதாவது மாஸ்க் அணிந்தவரிடமிருந்து யாருக்கும் தொற்று பரவாத வகையில்... சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை பலவகை மாஸ்குகள் கிடைக்கின்றன, பல வகைகளில், பல விலைகளில்... ஆனால், சோதனை முடிவுகளை வைத்துப் பார்த்தால், சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த மாஸ்கைவிட, சீன தயாரிப்பான மாஸ்குகள் நன்றாக வேலை செய்வது தெரியவந்துள்ளது.
துணி மாஸ்குகள் மிக மோசமாக இருப்பதாக சோதனைகள் தெரிவித்துள்ளன. சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் 16 மாஸ்குகளில் 4 மட்டுமே மூன்று பரிசோதனைகளையும் வென்றுள்ளன என்பது கவலைக்குரிய விடயம்தான்.
பிரச்சினைக்கான காரணங்களில் ஒன்று மருத்துவமனையில் பயன்படுத்தப்படாத, அதாவது பொதுமக்கள் பயன்படுத்தும் மாஸ்குகளுக்கான தெளிவான தரக்கட்டுப்பாடுகள் இல்லை என்பதுதான்.
பெரும்பாலான மக்கள் துணி மாஸ்குகளை பயன்படுத்தும் நிலையில், கண்டிப்பாக துணி மாஸ்குகளுக்கான சரியான தரக்கட்டுப்பாடுகள் இருந்தால் மட்டுமே மக்கள் தரமான மாஸ்குகளை நம்பி பயன்படுத்தமுடியும், பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது மட்டும் உண்மை.