சுவிட்சர்லாந்தின் டிசினோ மண்டலத்தில் பெண் ஒருவர் சக பெண்கள் இருவரை கத்தியால் தாக்கிய சம்பவத்தில், பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டிசினோ மண்டலத்தின் லுகானோ நகரில் பட்டப்பகலில், பல்பொருள் அங்காடி ஒன்றில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், குறித்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் இருவர் காயங்களுடன் தப்பியதாகவும் ஒருவர் லேசான காயங்களுடனும் இன்னொருவர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தின்றி தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.
தாக்குதலின்போது அல்லாஹு அக்பர் என குறித்த 28 வயது சுவிஸ் பெண் அலறியதாக கூறப்படுகிறது.
ஆனால், அதை உறுதி செய்த பின்னரே, தொடர்புடைய தகவல் வெளியிடப்படும் என மண்டல பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பெண் கைதாகியுள்ள நிலையில், அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதல்தாரி இதற்கு முன்னர் 2017-ல் தீவிரவாத தொடர்பில் பொலிஸ் விசாரணையை எதிர்கொண்டவர் என்ற தகவலையும் அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட்டன;
இது போன்ற ஒரு நிகழ்வு எந்த மேற்கத்திய நாட்டையும் பாதிக்கும். டிசினோவுக்கு இது முதல் சம்பவம் என தெரிவித்துள்ளார் டிசினோ மண்டல அரசாங்கத்தின் தலைவர் நார்மன் கோபி.