மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆறு சிறுவர்கள், கைது செய்யப்பட்ட இருவர்: பிரித்தானியாவில் மர்மம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வீடு ஒன்றின் முன் குவிந்த பொலிசார், அந்த வீட்டிலிருந்து ஆறு சிறுவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Shiregreen பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் முன் 20 பொலிஸ் கார்களும் நான்கு ஆம்புலன்ஸ்களும் வந்து நின்றன.

வீட்டிற்குள் சென்ற பொலிசார் அங்கிருந்த ஆறு சிறுவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் இருவர் உடல் முழுவதும் பேண்டேஜ்களோடு கொண்டு செல்லப்பட்டதாக கண்ணால் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

அதேபோல், கையில் விலங்கிடப்பட்ட ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பொலிசார் அழைத்து சென்றதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

அந்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் சிறுவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டதாக தெரிவிக்க, பொலிசார் அது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் மருத்துவமனையில் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் இருவருக்கும் உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஏழு மாத குழந்தை ஒன்றும் அடங்கும்.

அந்த குழந்தையுடன் ஒரு 11 வயது பிள்ளையும் ஒரு 10 வயது பிள்ளையும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த பொலிசார், கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 37 வயது ஆண் ஒருவரையும், 34 வயது பெண் ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அங்கு என்ன நடந்தது, இறந்தவர்கள் யார், எதனால் இறந்தார்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தொடர்பு உள்ளதா என அந்த தகவலையும் பொலிசார் தெரிவிக்கவில்லை.

சம்பவம் தொடர்பாக எந்த விடயத்தையும் பொலிசார் தெரிவிக்காமல், மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மட்டுமே கூறியுள்ளதால் அங்கு என்ன நடக்கிறது என்ற பெரும் மர்மம் நிலவுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers