அப்பா இறந்த அன்றும் பிரித்தானியாவில் கடை வைத்திருக்கும் இந்தியர் செய்த நெகிழ்ச்சி செயல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
989Shares

பிரித்தானியாவில் கடை நடத்தும் இந்தியர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களிடம் நடந்து கொண்ட விதத்தினால் பலரும் அவரை பாராட்டி நெகிழ்கின்றனர்.

குஜராத்தை சேர்ந்த அஷோக் பட்டேலின் லீனா ஸ்டோர்ஸ் வடக்கு லண்டனில் பிரபலமானது.

அதன் பிரம்மாண்டத்தினால் என்று சொல்ல முடியாது, காரணம் அது ஒரு சிறிய கடை. லண்டனில் corner shop என்று அழைக்கப்படும் சிறிய வகை கடை அது.

ஆனால், அதை நடத்தி வந்த அஷோக் பட்டேலை அந்த பகுதியில் தெரியாதவர்களே கிடையாது என்று சொல்லலாம்.

ஆடம்பரமாக ஒன்லைனில் ஆர்டர் செய்து பொருட்கள் வாங்குபவர்கள் கூட, சமைக்கும்போது திடீரென வெண்ணெய் காலி ஆகிவிட்டால், ஓடு லீனா ஸ்டோர்ஸ்க்கு என்றுதான் சொல்லுவார்கள்.

அன்று கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள், கடையின் கண்ணாடிக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அந்த அறிவிப்பை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியானார்கள்.

அதில், இன்று மாலை கொஞ்சம் சீக்கிரமாக, 5 மணியளவில் கடை அடைத்து விடுவோம், அப்பா நேற்று இறந்துபோனார்கள் என்று எழுதியிருந்தது.

அத்துடன் நிறுத்தியிருந்தால், அஷோக் பட்டேலின் மகன் ராஜ் பட்டேலுக்கு ஆறுதல் கூறிவிட்டு போயிருப்பார்கள் வாடிக்கையாளர்கள்.

ஆனால், அந்த அறிவிப்பின் முடிவில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துகிறோம் என்று எழுதப்பட்டிருந்தது.

நிச்சயம் அதன் பொருள் எங்கள் வீட்டில் ஒரு மரணம், அதனால் கடை அடைக்கிறோம் என்பதல்ல, உங்களுக்கு சிரமம் கொடுக்க நேர்ந்துவிட்டதே என்ற உண்மையான ஒரு கடைக்காரரின் வருத்தம் அது என்பதை வாடிக்கையாளர்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

லீனா ஸ்டோர்ஸ்சின் நீண்ட கால வாடிக்கையாளரான Harry Wallop என்பவர், அஷோக் பட்டேல் இறந்த அன்றும் கடை திறந்திருப்பதைக் கண்டு கடைக்குள் போக, அங்கே கடைக்குள் கண்கள் கலங்கிய நிலையில் அமர்ந்திருந்திருக்கிறார் அஷோக் பட்டேலின் மகன் ராஜ் பட்டேல்.

அவரிடம் ஆறுதல் தெரிவித்துவிட்டு, ஏன் இன்று கடை திறந்தீர்கள் என்று கேட்க, அவர் சொன்ன பதில், எல்லாம் வாடிக்கையாளர்களுக்காகத்தான், நாங்கள் என்றைக்கு கடையை மூடினோம் என்பதுதான்.

உண்மைதான், மழை என்றாலும் சரி, சாலையில் ஏதோ கலாட்டா என்றாலும் சரி, குற்றவாளி ஒருவன் தப்பி விட்டான், கதவை அடைத்துக்கொண்டு கவனமாக இருங்கல் என பொலிசார் அறிவித்தாலும் சரி, வருடத்தின் 365 நாட்களும் பட்டேலின் கடை திறந்துதான் இருக்கும்.

முன்னர் ஒருமுறை, சில முரடர்கள் கடைக்குள் புகுந்து பட்டேலை கத்தியால் தலையில் குத்தி, மட்டை ஒன்றினால் அவரை தாக்கிய செய்திகள் சிலருக்கு நினைவிருக்கலாம்.

அப்போதும் தலையிலும் கையிலும் கட்டுடன் கடையில் வந்து உட்கார்ந்திருந்தவர் பட்டேல் என்றால், அவரது வாடிக்கையாளர் பாசத்தை சொல்ல வேறு உதாரணங்கள் தேவையில்லை.

ஒரு வேளை பணத்துக்காக நாளெல்லாம் அவர் கடையை திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார் என நீங்கள் எண்ணினால், அதற்கும் ஒரு சம்பவம் உண்டு என்கிறார் Emily Grazebrook.

ஒரு முறை Emily, கொஞ்சம் பணத் தட்டுப்பாடு காரணமாக, கையில் போதுமான பணம் இல்லாததால் பட்டேலிடம் ஒரு காசோலையைக் கொண்டு கொடுத்து, இதை வைத்துக்கொள்ளுங்கள், பணம் வந்ததும் சொல்கிறேன், அப்போது இதை காசாக்கிக்கொள்ளுங்கள், இப்போது கொஞ்சம் மளிகை பொருட்கள் கிடைக்குமா என்று தயங்கியவாறு கேட்டாராம்.

அந்த காசோலையை அவரிடமே கொடுத்த அஷோக் பட்டேல், இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள், உங்களுக்கு எப்போது பணம் வருகிறதோ அப்போது எனக்கு தந்தால் போதும் என்றாராம்.

இப்படியே பட்டேலை அறிந்த ஒவ்வொருவரும், அவரால் தாங்கள் அடைந்த நன்மையைச் சொல்லி நெகிழ்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்