பிரித்தானியாவில் இருந்து விமானத்தில் வந்த பார்சல்! சிக்கிய டெலிவரி எடுக்க வந்த வாலிபர்: உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட மெத்தா பெட்டமைன் என்ற போதை மாத்திரைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு தற்போது வரை அமுலில் உள்ளது. இதை பயன்படுத்தி போதை பொருட்கள் கடத்தல் சம்பவம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரித்தானியாவின் பிர்மிங்காம் நகரில் இருந்து மருத்துவ பொருட்கள் என குறிப்பிடப்பட்ட, கூரியர் பார்சல் நேற்று முன்தினம் மாலை, சரக்கு விமானம் மூலம் தமிழகத்தின் சென்னைக்கு வந்துள்ளது.

பொதுவாக சரக்கு விமானத்தில் வரும் கூரியர் பார்சல் போன்றவைகளை சுங்கத்துறையினர் சந்தேகம் ஏற்பட்டால் அந்த பார்சலை சோதனை செய்வது வழக்கம்.

அந்த வகையில், இந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள், சோதனையிட்ட போது, அதில் நீல நிறத்திலான 270 மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

மருத்துவ மாத்திரைகள் என்றாலும், அதிகாரிகளுக்கு இதில் சந்தேகம் இருந்ததால், உடனடியாக அந்த மாத்திரைகளை ஆய்வகத்தில் சோதிக்க முடிவு செய்துள்ளனர்.

அதன் படி சோதித்த போது, அது வெளிநாடுகளில் பயன்படுத்தும் விலை உயர்ந்த மெத்தாம் பெட்டமைன் என்ற ஒருவகை போதை மாத்திரைகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பார்சல் யாருக்கு வந்திருக்கிறது என்று பார்த்த போது, திருவள்ளூரில் இருக்கும் ஒரு முகவரிக்கு வந்திருப்பது தெரியவந்தது.

அந்த முகவரியில் இருந்த செல்போன் நம்பர்கள் அனைத்து போலியானவை என்பதால், அதிகாரிகளால் நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பின், நேற்று மதியம் அந்த பார்சலை டெலிவரி எடுக்க வந்த சுமார் 25 வயது வாலிபரை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 8 லட்சம் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில தினங்களுக்கு முன்னர் தான் ஜேர்மன் நாட்டில் இருந்து தமிழகத்திற்கு சரக்கு விமானத்தில் வந்த கூரிய பார்சலில் மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறங்களில் 100 மாத்திரைகள் இருந்தன.

அந்த மாத்திரைகளை ஆய்வு செய்து பார்த்த போது, அனைத்துமே மெத்தொகட்டமின் என்ற போதை மாத்திரைகள் என தெரியவந்ததால், கவிக்குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இப்படி கொரோனா ஊரடங்கில் சென்னை விமான நிலையத்தில் மருந்து பொருட்கள் என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் போதை மாத்திரைகள் பிடிபடுவது கடந்த 20 நாட்களில் இது 3-வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்