ஆடையுமின்றி காலில் செருப்பும் இன்றி மலேசிய காடு ஒன்றில் கிடந்த ஒரு பிரித்தானிய பெண்ணின் உடலில் காயங்கள் இல்லையா என்ற கேள்வி மலேசிய நீதிமன்றம் ஒன்றில் எழுப்பப்பட்டது.
கற்றல் குறைபாடு கொண்ட பிரித்தானிய சிறுமி Nora Quoirin (15) சென்ற ஆண்டு மலேசியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது மாயமானாள்.
பின்னர், பொலிசாரின் 10 நாட்கள் தீவிர தேடலுக்குப்பின் Noraவின் ஆடையில்லாத உடல் நீரோடை அன்றின் அருகே சுற்றுலாப்பயணிகளால் கண்டெடுக்கப்பட்டது.
கற்றல் குறைபாடு கொண்ட தங்கள் மகள், தானாகவே தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலிலிருந்து வெளியேறியிருக்க முடியாது என்று கூறிய Noraவின் பெற்றோர், தங்கள் மகளுக்கு 15 வயது என்றாலும், அவள் மன ரீதியாக 5 அல்லது 6 வயது மட்டுமே உடையவள் என்றும், மற்றவர்கள் உதவியின்றி அவளால் நடக்க இயலாது என்றும் தெரிவித்தனர்.
அப்படியிருக்கும் நிலையில், அவள் எப்படி அந்த நீரோடைக்கு சென்றாள் என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
அவள் ஏன் நிர்வாணமாக கிடந்தாள், நிர்வாணமாகவும், காலில் செருப்பும் இல்லாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் உடலில் காயங்களே இல்லையா என Noraவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த வழக்கில் முதல் சாட்சியான பொலிஸ் அதிகாரி ஒருவர், அவளது உடலில் குறிப்பிடத்தக்க அளவில் காயங்கள் இல்லை என்றும் சில சிறு கீறல்களே இருந்தது உண்மைதான் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், Nora கடத்தப்பட்டிருக்கவும் வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
பொதுவாக கடத்தல் வழக்குகளில் எங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வரும், பிணைத்தொகை கேட்பார்கள், இந்த வழக்கில் அப்படி எதுவும் நடக்கவில்லை, ஆகவே, என்னைப் பொருத்தவரை Nora தானாகத்தான் ஜன்னல் வழியாக வெளியேறி சென்றுள்ளாள் என்றார் அவர்.
அத்துடன், ஒரு வாரத்திற்கு மேல் காட்டில் தனியாக அலைந்ததால், பசி மற்றும் மன அழுத்தத்தால் குடலில் இரத்தக்கசிவு ஏற்பட்டுதான் Nora உயிரிழந்தாள் என உடற்கூறு ஆய்வில் கூறப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர் பொலிசார்.
இருந்தாலும், தங்கள் மகள் தனியாக வெளியே செல்ல மாட்டாள் என்று Noraவின் பெற்றோர் வாதிட்டதுடன், நீதிமன்ற விசாரணை ஒன்று தேவை என கோரியதைத் தொடர்ந்து, இன்று நீதிமன்ற விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.