தன்னுடன் தங்கியிருந்தவரை 21 முறை கத்தியால் குத்தி கொலை செய்த இலங்கையர் வழக்கு: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா
449Shares

தன்னுடன் ஒரே அறையில் தங்கியிருந்தவரை 21 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழரை பிரித்தானியாவில் இருக்க அனுமதிக்கலாம் என நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதைக்கு பெயர் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான GR என்பவர், 2002ஆம் ஆண்டு, அவருக்கு 28 வயது இருக்கும்போது பிரித்தானியாவுக்கு வந்தார்.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது தான் ஒரு தமிழர் என்ற விதத்தில் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் தனக்கு புகலிடம் தரவேண்டும் என கோரியிருந்தார் GR.

ஆனால் உள்துறை அலுவலகம் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் GR, அதுவும் தோல்வியில் முடிந்தது... தொடர்ந்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவுமே வெற்றி பெறாத நிலையில், குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார் அவர்.

குற்றச்செயல்களின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்று, கடைசியாக 2010ஆம் ஆண்டு தன்னுடன் தங்கியிருந்த ஒருவரை 21 முறை GR கத்தியால் குத்த, அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இப்போது 45 வயதாகும் GRக்கு, இல்லாததை இருப்பது போல் தோன்றக்கூடிய மன நல பிரச்சினையாகிய paranoid schizophrenia என்ற பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் மீண்டும் புகலிடக் கோரிக்கை விடுத்தார். மனித உரிமைகள் சட்டம், ஷரத்து 3இன் அடிப்படையில் GR பிரித்தானியாவில் இருக்கலாம் என கீழ் புலம்பெயர்தல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

இலங்கை எல்லையில் அவர் கடுமையாக நடத்தப்படலாம் என்பதால், அவருக்கு மனித உரிமைகள் சட்டம், ஷரத்து 3இன் அடிப்படையில் பிரித்தானியாவில் இருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் தெரிவித்தது.

இதற்கு உள்துறை செயலர் பிரீத்தி படேல் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேல் புலம்பெயர்தல் தீர்ப்பாயம், கீழ் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது, அதாவது, GR பிரித்தானியாவில் இருக்கலாம் என தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஷரத்து 3இன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்