டிரம்ப் மீது இறுகும் விசாரணை... பதவிநீக்க நடவடிக்கையில் இருந்து தப்புவாரா? வெளிவரும் முழு தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
151Shares

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பதவி நீக்க தீர்மானத்திற்கு அங்குள்ள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஜனாதிபதி பதவிநீக்கம் நடைபெறுவது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு எதிராக களம் இறங்க இருக்கும் ஜோய் பைடனை விசாரிக்க உக்ரைன் அரசை வலியுறுத்தியதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்க அரசியலை உலுக்கியிருக்கும் இந்த விவகாரத்தை விசாரிக்க இருப்பதாக, சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கீழவையான பிரதிநிதிகள் சபை, ஹவுஸ் ஆஃப் ரெப்ரசண்டேட்டிவ்ஸ் என்றும் மேலவை செனெட் அவை என்றும் அழைக்கப்படும்.

நாட்டிற்கு துரோகம் இழைத்தல், லஞ்சம், சட்டமீறல் மற்றும் மிகப்பெரிய அளவிலான குற்றங்கள் செய்தால் இம்பீச்மெண்ட் எனப்படும் பதவிநீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகள் எவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில்லை. ஆனால், 1968ஆம் ஆண்டு ஆண்ட்ரூ ஜான்சன் மீதும், 1998ஆம் ஆண்டு பில் கிளிண்டன் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர்களை பதவியில் இருந்து நீக்க செனெட் சபை மறுத்துவிட்டது.

இருப்பினும் 1974ஆம் ஆண்டு ரிச்சர்டு நிக்சன் பதவியில் இருந்து நீக்கும் முன்பே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

பதவிநீக்கம் எப்படி நடைபெறும்?

பிரதிநிதிகள் சபை குழுக்கள் மூலமாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்படும். டிரெம்புக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக 6 குழுக்கள் விசாரணை நடத்த உள்ளன.

இந்த விசாரணையின் முடிவில் அவர் குற்றம் இழைத்தது கண்டறியப்பட்டால் சபையின் அனைத்து உறுப்பினர்கள் பார்வைக்கும் இவ்விவகாரம் சென்றடையும்.

அங்கு நடைபெறும் வாக்கெடுப்பின் முடிவினைப் பொறுத்து விவகாரம் செனட் அவையைச் சென்றடையும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பார்வையில் இவ்விசாரணை மேற்கொள்ளப்படும். ஜனாதிபதி குற்றம் இழைத்ததாக மூன்றில் 2 பங்கு செனட் அவை உறுப்பினர்கள் கருதினால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு துணை ஜனாதிபதி‌, நாட்டின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்பார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 235 ஜனநாயக கட்சி உறுப்பினர்களும், 199 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் உள்ளனர்.

செனட் சபைபில் 53 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும், 45 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தரும் 2 சுயேச்சை உறுப்பினர்களும் உள்ளனர்.

67 வாக்குகள் இருந்தால் மட்டுமே டிரம்பை பதவியில் இருந்து நீக்க முடியும். ஆனால் அதற்கு டிரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே அது சாத்தியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்