சுத்தியலால் பெண் ராணுவ வீரர் அடித்துக் கொலை... சடலத்தை நொறுக்கி சிமெண்ட் கலவையால் மூடப்பட்ட கொடூரம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மாயமான பெண் ராணுவ வீரரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் வெளியான பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் ஃபோர்ட் ஹூட் பகுதியில் அமெரிக்க ராணுவ முகாம் ஒன்று அமைந்துள்ளது.

இங்கு பணியாற்றிவந்த 20 வயது கடந்த இளம் ராணுவ வீரர் வனேசா கில்லன் என்பவர் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது.

குறித்த புகாரைத் தொடர்ந்து, ராணுவத்தினரே நாளுக்கு 500 பேர் கொண்ட குழுவினர் கில்லனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அவரது அறையில் இருந்து அடையாள அட்டை உள்ளிட்ட முக்கியமான அனைத்தும் கண்டெடுக்கப்பட்டது.

இதனால் ராணுவ அதிகாரிகளுக்கு, அவர் மாயமாகவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.

தொடர்ந்து அமெரிக்க ராணுவத்தின் குற்றவியல் விசாரணை அமைப்பு இந்த வழக்கை முன்னெடுக்க முடிவு செய்தது.

அவர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஃபோர்ட் ஹூட் முகாமில் இருந்து சுமார் 20 மைல்கள் தொலைவில் லியோன் நதிக்கரையில் இருந்து கில்லனின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து விசாரணை தீவிரமாக்கப்பட்ட நிலையில், இருவர் மீது ராணுவ விசாரணை அமைப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஒருவர் வனேசா கில்லனுடன் அதே முகாமில் பணியாற்றும் ஆரோன் ராபின்சன் என்ற ராணுவ வீரர்.

இன்னொருவர், அதே ராணுவ முகாமில் பணியாற்றும் ராணுவ வீரரின் மனைவியான செசிலி அகுய்லர்.

இவர்கள் இருவர் மீதும் விசாரணை நெருங்கி வந்த நிலையில், ஆரோன் ராபின்சன் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆனால் கைது செய்யப்பட்ட செசிலி அகுய்லர் நடந்த சம்பவம் அனைத்தையும் விலாவாரியாக ராணுவ விசாரணை அமைப்பிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவத்தன்று செசிலி மீதான முறை தவறிய உறவு தொடர்பில் வனேசா கில்லனுக்கும் ஆரோனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்,

அந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஆரோன் சுத்தியலால் வனேசா கில்லனை தாக்கியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாகவும் செசிலி தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, கில்லனின் சடலத்தை வாளால் வெட்டி நொறுக்கி, அதை சிமெண்ட் கலவையால் மூடியதையும் செசிலி தெரிவித்துள்ளார்.

மேலும், ஆரோனிடம் இருந்து வனேசாவுக்கு உடல் ரீதியான துன்புறுத்தலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தமது ராணுவ வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும் என்ற காரணத்தால் அவர் புகார் தெரிவிக்கவில்லை என கில்லனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

குறித்த புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என்பதால் அந்த குற்றச்சாட்டை ராணுவ குற்றவியல் விசாரணை அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்