உலகை உலுக்கிய ட்விட்டர் ஹேக்: மூளையாக செயல்பட்ட சிறுவன் கைது

Report Print Arbin Arbin in அமெரிக்கா

ஹேக்கிங் மூலம் முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்கி, அதன் வாயிலாக சுமார் 100,000 டொலர் தொகையை சுருட்டியதாக கூறப்படும் வழக்கில் ஒருவர் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் ஹேக்கிங் மூலமாக பல்வேறு முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஊடுருவப்பட்டன. அந்த பிரபலங்களின் கணக்கில் க்ரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் மோசடிப் பதிவுகள் பகிரப்பட்டன.

இந்த கணக்குகள் மூலமாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு, அந்த லிங்க் வழியாக அனுப்பப்படும் பணம், இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மாஸ்க், ஜோ பீடன், மைக் ப்ளூம்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், பிளாய்ட் மெவேதர் மற்றும் கிம் காதர்சியான் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் உட்பட உலகமெங்கும் பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் இந்த ஊடுருவலில் சிக்கியது.

தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனாலும் இதன் மூலமாக பிட்காயின் வாலட்டில் குறைந்தது 300 பரிவர்த்தனைகள் வழியாக, $100,000 தொகை ஹேக்கர்களால் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஊடுருவல் எப்படி நடந்தது என்பது தொடர்பில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் ப்ளோரிடாவின் தம்பாவில் 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே 19 வயது மற்றும் 22 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த இணையம் வழி ஊடுருவலுக்கு மூளையாக செயல்பட்டது 17 வயது சிறுவன் என பொலிசார் தெரிவித்துள்ளர்.

30 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவனை தற்போது ப்ளோரிடா பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த ட்விட்டர் தாக்குதல் என்பது மொத்தமாக 130 கணக்குகளை குறிவைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் விரைவான நடவடிக்கைக்கு ட்விட்டர் நிறுவனம் நன்றியுள்ளதாகவும், விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்