ஈரானின் ஒவ்வொரு தாக்குதலுக்கு ஆயிரம் மடங்கு பதிலடி! எச்சரிக்கும் ஜனாதிபதி டிரம்ப்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதிலடி அளிக்கப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அசாதரண சூழ்நிலை நிலவி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது.

அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் மீது தொடுக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இரு நாடுகள் இடையே விரிசல் மேலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்