இலங்கையில் கடல் நீர் நிலப்பகுதிக்கு வரும் சாத்தியம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Sujitha Sri in காலநிலை

இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும், தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏப்ரல் 26 ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்த பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பில் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 - 3.0 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

கரையை அண்டிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் கடல் அலைகள் சிறியளவில் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கும் வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அலைகளின் மட்டம் உயர்வாகக் காணப்படும் போது கடல் நீர் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வருவது அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்