தை மாத ராசிபலன்கள்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com
மேஷம்

ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டின் வலிமையினால் தொடர்ந்து சிறப்பான உழைப்பினை வெளிப்படுத்தி வருவீர்கள். அயராத உழைப்பும், தளராத முயற்சியும் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

மனதில் இருந்து வரும் உத்வேகம் செய்யும் செயலில் வெளிப்படும். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மனதினை அதிகமாக ஆக்கிரமிக்கும். புதிய செயல்திட்டங்களை வகுப்பதில் குழப்பம் உண்டாகும். சிறிது காலத்திற்கு புதிய முதலீடுகள், புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் அமைதி காப்பது நன்மை தரும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும்.

பேசும் வார்த்தைகளில் நிதானம் வெளிப்படும். பல்வேறு வழிகளிலிருந்தும் பொருள் தேட முயற்சித்து வருவீர்கள். முன்பின் தெரியாத புதிய நபர்களின் பேச்சினை நம்பி எந்த ஒரு விஷயத்திலும் தலையிடக்கூடாது. ‘ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது’ என்பதை நினைவில் கொள்ளவும்.

உடன்பிறந்தோரால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வண்டி, வாகனங்களால் செலவுகளைச் சந்திக்க நேரலாம். உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் அவர்களின் துணை உங்களுக்கு தேவைப்படலாம். மாணவர்களின் கல்வித் தரம் மேன்மையடையும்.

பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பினைக் காண்பீர்கள். குடும்பத்தினரோடு உல்லாசச் சுற்றுலா, கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் ஆகியவற்றில் பங்குபெறும் வாய்ப்பு உண்டு. தம்பதியருக்குள் கருத்தொற்றுமை அதிகரிக்கும்.

பெண் நண்பர்களால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும். தொழில்முறையில் அயராத உழைப்பிற்கேற்ற தனலாபத்தினைக் கண்டு வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினை அடைவார்கள். கலைத்துறையினருக்கு தை மாதத்தின் முற்பாதி லாபமாகவும், பிற்பாதி சிரமம் தரும் வகையிலும் அமையும். அயராத உழைப்பின் மூலம் நன்மை காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:

ஜனவரி 22, 23.

பரிகாரம்:

செவ்வாய் கிழமையன்று சக்கரத்தாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

ரிஷபம்

இந்த மாதத்தின் துவக்கமே சிறப்பான நற்பலன்களைத் தரும் வகையில் அமைகிறது. ஜனவரி 28ம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரனின் உச்சம் பெற்ற சஞ்சாரம் நினைத்த காரியங்களை எளிதில் நடத்தி முடிக்கும் திறனை அளிக்கும். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல, நீங்கள் சந்திக்க நினைக்கும் நபர் உங்களை நாடி வந்து உதவி செய்வார்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் விவேகமான கருத்துக்கள் அடுத்தவர்கள் மத்தியில் உங்கள் நன்மதிப்பினை உயரச் செய்யும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தினை உடனுக்குடன் கண்டு வருவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

நெருங்கிய நபர் ஒருவர் செய்நன்றி மறந்து செயல்படுவதைக் கண்டு மனம் வருந்த நேரிடும். உறவினர்களுடன் பண விவகாரங்களில் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. முக்கியமான காரியங்களில் இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக செயல்படுவது நல்லது. மாணவர்களின் கல்வித்தரம் உயரும். வண்டி, வாகனங்களால் ஒரு சில செலவுகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கியமான திட்டங்களை செயல்படுத்த கால நேரம் சாதகமாக அமையும் உடலில் அவ்வப்போது தலைதூக்கும் சோம்பல் தன்மையால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரலாம்.

கடன்பிரச்சினைகள் கட்டுக்குள் இருந்து வரும். முன்பின் தெரியாத பெண்களிடம் கூடுதல் கவனத்துடன் இருந்துகொள்வது நல்லது. நண்பர்களின் வழியில் கூடுதல் செலவுகளை சந்திக்க நேரலாம். இந்த மாதத்தில் பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றத்தினைக் காணும் நேரம் இது. அலுவல் பணியில் உயரதிகாரிகளிடம் நன்மதிப்பினைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சிறப்பான தனலாபம் காண்பார்கள். நினைத்தது நடக்கும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:

ஜனவரி 24, 25, 26

பரிகாரம்:

தை வெள்ளிக் கிழமை நாளில் மஹாலக்ஷ்மி பூஜை செய்யவும்.

மிதுனம்

தை மாதத்தின் துவக்கம் சற்று சிரமத்தினைத் தரும் வகையில் அமைந்திருந்தாலும், ஜனவரி 30ம் தேதி முதல் உண்டாகும் கிரஹ நிலை மாற்றம் சற்று ஆறுதல் தரும் வகையில் அமையும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும் இறங்கிய பணியில் வெற்றி காண்பீர்கள். சுயகௌரவத்திற்காக அடுத்தவர்களின் பணிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் ஈடுபாடு கொள்வீர்கள். மிகவும் நெருங்கிய நபர் ஒருவர் செய்நன்றி மறந்து செயல்படுவதைக் கண்டு மனவருத்தம் உண்டாகலாம். அடுத்தவர்களின் உதவியை அதிகம் எதிர்பாராது சுயபலத்தை மட்டும் நம்பி செயலில் இறங்குவது நன்மை தரும்.

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் மனமகிழ்ச்சி காண்பீர்கள். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருந்து வருவதால் கையிருப்பில் ஏதும் மிஞ்சாது.

பேசும் வார்த்தைகளில் தெளிவான கருத்துக்களை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளின் மூலம் குறிப்பிடத்தகுந்த நன்மை காண்பீர்கள். பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. தகப்பனார் வழி உறவினர் ஒருவருடன் மனஸ்தாபம் தோன்றும் வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றம் கண்டு வரும்.

பிள்ளைகளின் செயல்களில் சற்றே மந்தத்தன்மை இருப்பதாக உணர்வீர்கள். குடும்பத்தினருடன் கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு.

முக்கியமான பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கருத்தில் கொள்வது நல்லது. கௌரவச் செலவுகள் அதிகரிக்கும் நேரம் என்பதால் பண விவகாரங்களில் சுயகட்டுப்பாடு தேவை. தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதற்கேற்ற லாபத்தினைக் காண்பீர்கள். கலைத்துறையினர் தொழில்முறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவர்.

சந்திராஷ்டம நாட்கள்:

ஜனவரி 27, 28

பரிகாரம்:

‘சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தை சதா உச்சரித்து வர தடைகள் விலகும்.

கடகம்

இந்த மாதத்திய கிரஹ நிலை உங்கள் ராசிக்கு தொழில் முறையில் நற்பயனை உண்டாக்கித் தரும். ஜீவனாதிபதி செவ்வாயும், லாபாதிபதி சுக்ரனும் ஒன்றாக இணைவது ஜனவரி 28ம் தேதி முதல் காரியவெற்றியை சாத்தியமாக்கும். பொருள் வரவு நிலை அதிகரிக்கும். ஆயினும் தை மாத துவக்கத்தில் எட்டில் இணைவதால், ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

இதுநாள் வரை சந்தித்து வந்த நிதி நெருக்கடிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து குறையத் தொடங்கும். அடுத்தவர்களின் பொறாமை குணத்தினால் உங்களுக்கு உண்டாகும் இடைஞ்சல்களை சிரமப்பட்டு கடக்க வேண்டி இருக்கும். அத்தியாவசியத் தேவைகளுக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். பிரச்சினைகள் பல வந்தாலும் மனத் துணிவுடன் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.

புதிய நண்பர்கள் சேருவார்கள். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் வேகமான செயல்பாடுகளால் ஒரு சில செலவுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. போட்டியாளர்கள் அதிகம் இருப்பதால் கலைத்துறையினர் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. உடல்நிலைக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நேரம் இது. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பெண் நண்பர்களால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும்.

அலுவலகத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உள்ளது. ஆயினும் அனுசரித்துச் செல்லும் குணத்தின் மூலம் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளின் மூலம் வெற்றி காண்பார்கள். ஆன்மிகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் மாதத்தின் இறுதியில் உருவாகும். மற்ற விவகாரங்களில் சராசரியான பலனைக் கண்டாலும் தொழில்முறையில் சிறப்பான பலனைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:

ஜனவரி 29, 30

பரிகாரம்:

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனின் ஆலயத்தில் விளக்கேற்றி வழிபட்டு வரவும்.

சிம்மம்

இந்த மாதத்தில் சற்று சிரமத்தினைக் காண்பீர்கள். இருந்தாலும் தடையேதுமின்றி உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர்வீர்கள். செல்லும் பாதையில் இருந்து வரும் தடைக்கற்களை அகற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ‘இதனை இவன் செய்து முடிப்பான்’ என்பதைப் பிரித்தறிந்து பொறுப்புகளை பங்கிட்டு வேலை வாங்குவதில் தனித்துவம் காண்பீர்கள். பொதுப்பணிகளில் அதிகம் பங்கேற்க வேண்டிய சூழல் உருவாகக்கூடும். இதனால் குடும்பத்தில் லேசான சலசலப்புகளை சந்திக்க நேரலாம்.

ராசியில் அமர்ந்திருக்கும் இராகு மனதில் துணிவினையும், அசாத்தியமான தைரியத்தையும் தோற்றுவிப்பார். எதிர்பார்த்திருந்த பணவரவினைக் காண்பீர்கள். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் விவேகமான கருத்துக்களால் சுயகௌரவம் உயரக் காண்பீர்கள். உடன்பிறந்தோரால் அதிக செலவுகளுக்கு ஆளாக நேரிடலாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக நாட்டம் உண்டாகும். அந்நியப் பெண்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களை மாற்றும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும்.

உறவினர்களின் வழியில் ஒரு சில கலகங்களை சந்திக்க நேரலாம். மாணவர்களின் கல்வி நிலை மேன்மை அடையும். முக்கியமான நேரத்தில் பிள்ளைகளின் ஆலோசனை கைகொடுக்கும். மாதத்தின் முற்பாதியில் கடன் பிரச்சினைகள் தலைதூக்கக் கூடும். தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். திட்டமிட்டிருந்த ஆன்மிகப் பயணம் தள்ளிப்போவதற்கான வாய்ப்பு உண்டு. தொழில்முறையில் அதிக அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். க லைத்துறையினர் ஜனவரி 27ற்குப் பிறகு தங்கள் முயற்சிகளில் தடைகளைக் காண்பர். தடைக்கற்களை வெற்றிப்படிகளாக மாற்றிக்கொள்ளும் நேரம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:

ஜனவரி 31, பிப்ரவரி 1, 2

பரிகாரம்:

ஆதிபராசக்தி அன்னையை வழிபட்டு வாருங்கள்.

கன்னி

போராட்டமான நிலை மாறி இந்த தை மாதத்தில் நற்பலன்களைக் காண உள்ளீர்கள். மாதத்தின் துவக்கத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தனிப்பட்ட முறையில் உங்கள் கௌரவத்தினை உயர்த்திக் கொள்வீர்கள். பொதுப் பிரச்சினைகளில் முன்நின்று செயல்படுவதால் புகழ் உயரும். இக்கட்டான சூழலில் உங்களின் விவேகமான செயல்திட்டங்கள் வெற்றிபெற்று நற்பெயரைப் பெற்றுத் தரும். எங்கே எப்படிப் பேச வேண்டும் என்பதை அறிந்துகொண்டு நேரத்திற்குத் தக்கவாறு வார்த்தைகளைப் பிரயோகித்து நற்பலன் காண்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் மாறி மாறி இருந்து வரும். நிலுவையில் இருந்து வரும் பாக்கித்தொகைகள் விரைவில் வசூலாகும். எதிர்பார்க்கும் பொருள்வரவு தவறாது இந்த மாதத்தில் வந்து சேரக் காண்பீர்கள்.

புதிய பெண் நண்பர்களின் மூலம் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பீர்கள். தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பொழுதுபோக்குக் கருவிகளாகப் பயன்தரும். உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய நேரிடும். மாணவர்களின் கல்வித்தரம் மேன்மையடையும். உறவினர்களுடன் கலந்துரையாடுவதில் மனமகிழ்ச்சி காண்பீர்கள். பிள்ளைகளால் கூடுதல் செலவுகளை சந்திக்க நேரலாம். அவர்களோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையும், நிதானமும் தேவை.

குடும்பப் பெரியவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவீர்கள். கூட்டுத்தொழில் செய்து வருவோர் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்யோகஸ்தர்கள் அலுவலகக் கோப்புகளை பொறுமையுடன் கையாள்வது நல்லது. கலைத்துறையினருக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சாதகமான பலன்கைளத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:

பிப்ரவரி 3, 4

பரிகாரம்:

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுங்கள்.

துலாம்

(சித்திரை 3,4ம்பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1,2,3ம்பாதம் வரை) தை மாதத்தினை சிறப்பான முறையில் துவக்கும் உங்களுக்கு ஜனவரி மாதத்தின் இறுதியிலிருந்து சற்றே சிரம நிலை தோன்றக்கூடும். ஜனவரி 28ம் தேதி முதல் ராசிநாதனின் இடப்பெயர்ச்சி நிலையினால் சற்றே போராட்டமான சூழலை எதிர்கொள்ள நேரிடும். நினைத்த காரியங்கள் எளிதில் முடியாமல் இழுபறியைத் தோற்றுவிக்கும். ஒவ்வொரு காரியத்திலும் நீங்களே நேரடியாக இறங்கி பணியாற்ற வேண்டியிருக்கும். சுகமாக அமர்ந்திருந்த காலம் மாறி சுறுசுறுப்புடன் காரியமாற்ற வேண்டிய நேரம் இது.

உழைப்பிற்கான பலனை உடனடியாகக் காண்பீர்கள். தனாதிபதியின் சாதகமான நிலை சிறப்பான தனலாபத்தினை உண்டாக்கித் தருகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். அடுத்தவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் வெற்றி காணும். அதே நேரத்தில் அடுத்தவர்களை நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்பது நல்லதல்ல. தை மாதத்தின் பிற்பாதியில் உண்டாகும் கிரஹ மாற்ற நிலை சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடச் செய்து புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம். உடன்பிறந்தோரால் ஒரு சில இழப்புகளை சந்திக்க நேரிடும்.

தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதாகி எரிச்சலூட்டும். மாணவர்களின் தங்களின் முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டு நண்பர்களோடு இணைந்து படிப்பது நல்லது. இந்த மாதத்தில் முடிந்த வரை அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பெயரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகும். நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சினைகள் உடலில் தலைதூக்கக்கூடும். தொழில்முறையில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதினை ஆக்கிரமிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு நன்மை காண வேண்டிய மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:

பிப்ரவரி 5, 6

பரிகாரம்:

தைப்பூசத் திருநாளில் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.

விருச்சிகம்

இயற்கையில் அவசரபுத்திக்காரர்களாகிய உங்களுக்கு இந்த மாதத்தில் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்கும். ஆயினும் அடுத்தவர்களுக்கு முன்பாக நாம் செய்து முடித்துவிட வேண்டும் என்ற அவசரம் உங்கள் செயலில் வெளிப்படும். பார்க்கும் பொருட்களையெல்லாம் அடைந்துவிட வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகும். அளவுக்கதிகமாக ஆசைப்படுவது தவறு என்பதை உணர்ந்துகொண்டு செயல்படுவது நல்லது. இந்த மாதத்தின் துவக்கத்தில் நிகழும் கிரஹ நிலை மாற்றம் சிறப்பான நற்பலன்களைத் தரத் துவங்கும்.

தனகாரகன் சுக்ரனின் உச்சம் பெற்ற நிலை சிறப்பான பொருள் வரவினைக் காட்டுகிறது. நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு சேமிப்பில் ஈடுபடுவது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருவீர்கள். உடன்பிறந்தோரால் உங்கள் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நிகழும். இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பாராத வகையில் பெரிய மனிதர்களுடனான சந்திப்பு நிகழக்கூடும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

வாகனங்களினால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் சற்று மன வருத்தத்தினைத் தோற்றுவித்தாலும் அவர்களது செயல்வெற்றி உங்களை பெருமிதம் கொள்ளச் செய்யும். கடன்பிரச்சினைகள் வெகுவாகக் குறையும். தம்பதியரின் கருத்தொற்றுமை மிக்க செயல்பாடுகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுத் தரும். குறைந்த விலை உள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் உருவாகலாம். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:

பிப்ரவரி 7, 8

பரிகாரம்:

தினமும் ஞான தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது.

தனுசு

இந்த தை மாதத்தில் உங்களின் நெடுநாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. இழுபறியில் இருந்து வரும் குடும்பப் பிரச்சினைகள் நெடிய போராட்டத்திற்குப் பின் முடிவிற்கு வரும். மாதத்தின் துவக்கத்தில் சுகமான சூழ்நிலையை சந்தித்து வரும் உங்களுக்கு இரண்டாம் வாரத்தில் இருந்து ஓய்வின்றி செயல்பட வேண்டியிருக்கும்.

பல்வேறு தரப்பிலிருந்தும் வரும் எதிர்ப்புகளை மீறி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் நிலவும் சலசலப்பினைப் போக்கி கலகலப்பான சூழலுக்கு மாற்ற முயற்சிப்பீர்கள். நிலுவையில் இருந்து வரும் பழைய பாக்கிகள் வசூலாகும் நேரம் இது.

அதிகாரமான பேச்சுக்கள் ஒரு சில நேரத்தில் அவப்பெயரை உண்டாக்கினாலும் அதையே உங்களது பலமாகவும் எண்ணுவீர்கள். உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். சுயகௌரவத்திற்காக ‘உதவுகிறேன் பேர்வழி’ என்று அகலக்கால் வைக்கலாகாது.

புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். மாதத்தின் முற்பாதியில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்குத் தக்கவாறு அமையும்.

அவர்களால் உங்கள் கௌரவம் உயரும் நேரம் இது. சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முக்கியமான பிரச்சினையில் நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். ஆன்மிகச் செலவுகள் அதிகரிக்கும். தொழில்முறையில் கூடுதல் உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஆயினும் அதற்குரிய தனலாபத்தினை உடனடியாகக் காண்பீர்கள். கூட்டுத்தொழில் லாபகரமாகச் செல்லும். கலைத்துறையினர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் தளராது செயல்பட்டு வருவதால் வெற்றி கிடைக்கும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:

ஜனவரி 14, பிப்ரவரி 9, 10

பரிகாரம்:

லட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வரவும்.

மகரம்

சிறப்பான கிரஹ அமைப்போடு இந்த மாதத்தினைக் காண உள்ள உங்களுக்கு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அமையும். சனி, சுக்ரன் ஆகியோரின் சாதகமான அமர்வு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களில் உங்களை முதலீடு செய்ய வைக்கும். நெடுநாளைய விருப்பங்கள் நிறைவேறும் நேரம் இது. நிலுவையில் இருந்து வரும் பாக்கித்தொகைகள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பல்வேறு வழிகளிலிருந்தும் பொருள் வரவினைக் காணத் துவங்குவீர்கள். பேசும் வார்த்தைகளில் தேர்ந்தெடுத்த கருத்துக்களை பிரயோகித்து கௌரவத்தினை உயர்த்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகக் கூடும்.

பிரயாணத்தின்போது புதிய நட்புறவு உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன்தரும் வகையில் அமையும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்களினால் ஆதாயம் உண்டாகும் நேரம் இது. உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கும். வீட்டினில் ஆடம்பர பொருட்கள் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்களின் எழுத்துத்திறன் கூடும். பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். பரம்பரைச் சொத்துக்களை உருமாற்றிக் கொள்ள கால நேரம் சாதகமாக அமையும்.தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.

அநாவசிய செலவுகள் முற்றிலுமாக கட்டுக்குள் இருந்து வரும். அயல்நாட்டுப் பயணத்திற்காக காத்திருக்கும் கலைத்துறையினருக்கு நற்தகவல் வந்து சேரும். தொழில்முறையில் போட்டியான சூழலை சந்திக்க நேர்ந்தாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை உடனுக்குடன் காண்பார்கள். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:

ஜனவரி 15, 16, பிப்ரவரி 11, 12

பரிகாரம்:

பிரதோஷ நாளில் சிவாலயத்தில் அன்னதானம் செய்யவும்.

கும்பம்

இந்த தை மாதத்தின் முதல் வாரத்தில் லேசான சிரமத்தினைக் காணும் உங்களுக்கு ஜனவரி மாதத்தின் இறுதியிலிருந்து சாதகமான பலன்கள் கிடைக்கக் காண்பீர்கள். விவேகமான எண்ணங்கள் மனதில் குடிபுகும். எந்த ஒரு காரியத்தையும் எளிதாகச் செய்துமுடிக்கும் செயல்திறனை அறிந்துகொண்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தன ஸ்தானத்தில் உச்ச வலிமையுடன் அமரும் சுக்ரன் சிறப்பான பொருள் வரவினை உண்டாக்குவார். கடன்பிரச்சினைகள் முற்றிலுமாகக் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு அதிகமாக வெளிப்படும்.

நண்பர்களின் ஆலோசனைகள் தக்க நேரத்தில் பயன் தரும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்குத் துணை நிற்கும். பெரிய மனிதர்களுடனான சந்திப்பு உங்கள் கௌரவத்தை உயர்த்துவதோடு எதிர்காலத் திட்டங்களுக்குப் பயன் தரும் வகையில் அமையும். வீடு, மனை போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதற்குக் காலநேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றால் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வருகை குடும்பத்தின் கலகலப்பை அதிகரிக்கச் செய்யும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் மேன்மை காண்பார்கள்.

விளையாட்டுத்துறையைச் சார்ந்த மாணவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம அடைவார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை, கொண்டாட்டங்கள் ஆகியவற்றை மனம் நாடும். தம்பதியருக்குள் மாதத்தின் துவக்கத்தில் உண்டாகும் கருத்து வேறுபாடு பிற்பாதியில் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். தான தரும காரியங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடலாம். தொழில்முறையில் உங்களின் செயல்திட்டங்களின் மூலம் தனித்துவத்தை வெளிப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் பேச்சுத்திறமையினால் வெற்றி காண்பர். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:

ஜனவரி 17, 18

பரிகாரம்:

அமாவாசை நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

மீனம்

தை மாதத்தின் துவக்கத்தில் மிகுந்த சிரமத்தினைக் காணும் நீங்கள் ஜனவரி 28ம் தேதி முதல் சற்றே சிரமங்கள் குறையக் காண்பீர்கள். ராசியில் உச்ச வலிமையுடன் அமர உள்ள சுக்ரன் உங்களை இன்முகத்தோடு இருக்கச் செய்வார். மனதில் இருக்கும் கஷ்டத்தினை வெளிப்படுத்திக் கொள்ளாது எதையும் தாங்கும் இதயத்தோடு நடந்து கொள்வீர்கள். அதிசாரமாய் எட்டாம் இடத்தில் அமர உள்ள குருவினாலும், 12ம் இடத்தின் வலிமையினாலும் இழுபறியான சூழலைச் சந்திக்க உள்ளீர்கள். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருப்பதால் மன வருத்தம் தோன்றக்கூடும். பேசும் வார்த்தைகளில் தத்துவம் நிறைந்த கருத்துக்கள் அதிகமாக வெளிப்படும்.

உங்களது ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு உபயோகமாய் அமையும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தினை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் அமையும். அண்டை அயலாருடன் பழகும்போது எச்சரிக்கை தேவை. குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் செலவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் முடிந்தவரை அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதல் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். ஞாபகமறதியினால் அவதிப்பட நேரிடலாம். இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வழக்கு விவகாரங்களில் அடக்கி வாசிப்பது நல்லது.

தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. தொழில்முறையில் சிரமம் ஏதுமின்றி சாதித்து வருவீர்கள். கலைத்துறையினர் பிப்ரவரி மாதத்தில் சாதனைகள் புரிவார்கள். அதிக அலைச்சலை சந்திக்கும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்:

ஜனவரி 19, 20, 21

பரிகாரம்:

ஷீர்டி சாயிபாபாவை வணங்கி வாருங்கள்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments